சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களில் அரசியல் தலைவர்கள் குறித்து தனிப்பட்ட விமர்சனம் செய்ய வேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலத் தலைவர் இரா.தமிழ்பெருமாள், மாநிலச் செயலாளர் க.பாரதி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும், நீட் தேர்வு முறைகேட்டுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். இதை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமாக பாலன் இல்லத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிசார்பில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் உட்பட பல்வேறு முற்போக்கு இளைஞர் மாணவர் அமைப்புகளின் ஆதரவுடன் கடந்த 4 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் வருகை தந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் அமைப்பினர் உரையாற்றும்போது கோரிக்கைகளின் நோக்கங்கள், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை தொடர்பாக மட்டும் பேசினால், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளில் உள்ள இளைஞர்களும், மாணவர்களும் பேராதரவு தருவார்கள்.
பாஜகவை தவிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் எதிர்ப்பில் உறுதியாக உள்ளார்கள் என்பதை மத்திய அரசும் உணரும். எனவே தங்களது உரைகளில் தனிப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் வலியுறுத்திஉள்ளனர்.