சென்னை: அதிமுகவில் விருப்ப மனு அளித்துள்ளவர்கள், வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு வாய்ப்பு பெற்றுத் தருமாறு யாரையும் அணுகி ஏமாற வேண்டாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளின் தனி கவனத்திற்கு.
கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லோசியோடும்; கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கோடானு கோடி தொண்டர்களின் ஒத்துழைப்போடும், `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வருகிறது.
இந்நிலையில், சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராகிய நான் `தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும்’ என்றும்; அதேபோல், `தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வேண்டியும்’ ஏராளமான கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் அளித்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும், `கழகப் பொதுச் செயலாளர்’ என்ற முறையில், எனது இதயமார்ந்த நன்றியையும், நல்வாழ்த்துகளையும் அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களுக்காக விருப்ப மனு அளித்துள்ளவர்களுடனான நேர்காணல், தலைமைக் கழகத்தில் வருகின்ற 9.1.2026 அன்று தொடங்கி நடைபெற உள்ளது. தகுதியான நபர்கள் கழக ஆட்சி மன்றக் குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
ஆகவே, விருப்ப மனு அளித்துள்ளவர்கள், `கழகத்தின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு வாய்ப்பு பெற்றுத் தருமாறு யாரையும் அணுகி ஏமாற வேண்டாம்’ என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன். கழகத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு ஒருசிலர் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக தலைமைக்கு தகவல் வந்துள்ளது.
ஆகவே, விருப்ப மனு அளித்துள்ளவர்கள், யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்வதோடு, கழகத்திற்காக உழைப்பவர்களுக்கு முக்கியத்துவமும், அங்கீகாரமும் உரிய நேரத்தில் வழங்கப்படும்.
தங்களுக்காக விருப்ப மனு அளித்துள்ளவர்கள், விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் வருபவர்கள் மட்டுமே நேர்காணலில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல், விருப்ப மனு பெற்றவர்கள் யாரேனும், அம்மனுவை திரும்ப வழங்காமல் இருந்தால், அவர்கள் உடனடியாக அப்படிவங்களைப் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.