தமிழகம்

‘முதல்வர் ஸ்டாலின் இமேஜை கெடுக்க சூழ்ச்சி!’ - கே.என்.நேரு விவகாரத்தில் திமுக ரியாக்‌ஷன்

தமிழினி

சென்னை: நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ‘தேர்தல் நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கட்சி இமேஜை கெடுப்பதற்காக சூழ்ச்சிகள் செய்யப்படுவதாக திமுக எதிர்வினையாற்றியுள்ளது.

இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ஆர்.எஸ்.பாரதி கூறும்போது, “அமைச்சர் கே.என்.நேரு மீது சிபிஐ விசாரணை நடந்துகொண்டிருந்த போது, அமலாக்கத் துறை சில ஆவணங்களை எடுத்ததாகச் சொல்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரு சிபிஐ வழக்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த முக்கிய வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

          

சிபிஐ வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அமலாக்கத் துறையிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என்றாலும், அவர்கள் தமிழ்நாடு அரசை நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டனர். அமைச்சர் கே.என்.நேருவை கட்சியின் மூத்த தலைவர் என்றோ, கட்சியின் முதன்மைச் செயலாளர் என்றோ கூடப் பார்க்காமல் உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் விரிவான விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தற்போது அந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசு ஏற்கெனவே விசாரணை நடத்திக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இது ஒன்றும் பின்னடைவு அல்ல, திமுகவின் சட்டத் துறை இதனைச் சட்டரீதியாகச் சந்தித்து முறியடிக்கத் தயாராக இருக்கிறது.

அமைச்சர் கே.என்.நேரு மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல வழக்குகளை தொடுத்திருக்கிறார். அத்தனை வழக்குகளையும் எதிர்கொண்டு வென்று காட்டியவர்தான் கே.என்.நேரு. பாஜக அரசு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரத்தை நள்ளிரவில் கைது செய்து 100 நாட்கள் சிறையில் வைத்தும், மூன்று ஆண்டுகள் ஆகியும் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

கடந்த 2016-ல் லாரிகளில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் வழக்கில் 10 ஆண்டுகள் ஆகியும் சிபிஐ இதுவரை முதல் தகவல் அறிக்கையைக் கூடப் பதிவு செய்யவில்லை. இவை அனைத்தும் தேர்தல் நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக இமேஜைக் கெடுப்பதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சிகள். அமைச்சர் நேரு தற்போது 41 தொகுதிகளுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தேர்தல் பணியைப் பார்த்துப் பொறாமைப்பட்டு எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையின் பேரில் டெல்லியில் இருப்பவர்கள் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்.

ஆனால், அமைச்சர் நேரு இத்தகைய அச்சுறுத்தல்களுக்குப் பயப்பட மாட்டார்; தட்டத் தட்ட பந்து எழும்புவது போல இன்னும் தீவிரமாகப் பணியாற்றுவார்” என்று என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

முன்னதாக, தமிழக நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, அமலாக்கத் துறை சார்பில் தமிழக டிஜிபி-க்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.

வேறொரு வழக்கு விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை டிஜிபி-க்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசுத் தரப்பில், அமலாக்கத் துறையின் கடிதம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை வழங்கிய ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது என்பதால், அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். அமலாக்க துறை போதுமான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதால் ஆரம்பகட்ட விசாரணை நடத்த தேவையில்லை எனவும், அமலாக்க துறை அளித்த கடிதங்களில் போதுமான ஆதாரங்கள் உள்ளதால் வழக்குப் பதிவு செய்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT