சென்னை: தவெகவுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி திமுகவின் முதுகில் குத்தி இருப்பதாக அக்கட்சி கூறி இருப்பது புலம்பல் என்று மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் அக்கட்சியின் எம்.பி.யுமான மாணிக்கம் தாக்ர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “எங்களைப் பொருத்தவரை இந்த கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது. 2026 தேர்தல் முடிந்துவிட்டது. அடுத்து என்ன செய்வது என்பது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரக் குழு நேற்றிரவு கலந்து ஆலோசித்தது.
இரவு 10 மணி முதல் 12 மணி வரை ஜூம் மீட்டிங்கில் ஆலோசனை நடைபெற்றது. இதில், 29 உறுப்பினர்கள் கலந்து கொண்டோம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், முன்னாள் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டோம். அதில் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அறிவிப்பார்” என மாணிக்கம் தாகூர் பதில் அளித்தார்.
தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பெறுமா என்ற கேள்விக்கு, “குழந்தை பிறப்பதற்கு முன்பே பெயர் வைப்பது போன்றது உங்கள் கேள்வி. இந்த தேர்தலில் தமிழக வாக்காளர்கள் தெளிவான ஒரு முடிவை எடுத்துள்ளார்கள். தேர்தலுக்கு முன்பு சிலர், ஆட்சியில் பங்கு என்பதை தமிழகம் ஏற்காது என்றெல்லாம் சிலர் சொன்னார்கள். அவர்களின் இந்த பேச்சுக்கு தமிழக மக்கள் பதில் சொல்லிவிட்டார்கள்” என மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு திமுக, அதிமுக இரண்டும் இல்லாத ஒரு கட்சியின் தலைமையில் ஆட்சி அமைய இருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு, “திமுக, அதிமுக முன்வைக்கும் அதே அரசியல் கருத்துகளைத்தான், கொள்கைகளைத்தான் தவெகவும் முன்வைக்கிறது. எம்ஜிஆர், கருணாநிதி என்ன அரசியலை பேசினார்களோ அதே அரசியலைத்தான் விஜய்யும் பேசுகிறார். எங்களைப் பொருத்தவரை, இந்த மண் பாஜகவுக்கு எதிரான மண்; ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிரான மண்; இந்த மண் வெறுப்பு அரசியலுக்கு எதிரான மண் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்” என மாணிக்கம் தாகூர் கூறினார்.
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுப்பது திமுகவின் முதுகில் குத்தும் செயல் என திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு, “சரவணன் போன்றவர்கள் பத்திரிகைகளில் வேண்டுமானால் பேசிக்கொண்டிருக்கலாம். எங்களைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அரசியல் விவகாரக் குழு முடிவெடுத்திருக்கிறது. அந்த முடிவை கிரிஷ் சோடங்கர் அறிவிப்பார். சரவணன் போன்றவர்கள் கூறி இருப்பது புலம்பல்.
எங்களைப் பொருத்தவரை பாஜக, ஆர்எஸ்எஸ் வரக்கூடாது. அதற்காகவே நாங்கள் போராடுகிறோம். சரவணன் போன்றவர்கள் இது குறித்து புரியாமல் பேசுகிறார்கள். அவரது பேச்சு பாஜகவுக்கு ஆதரவானது. இது வன்மத்தில் இருந்து உருவாகும் கருத்து. தமிழகத்தின் நன்மையைத்தான் பார்க்க வேண்டும். தனக்கு (திமுகவுக்கு) கிடைக்கவில்லை என்பதற்காக யாருக்கும் கிடைக்கக்கூடாது என நினைப்பது வன்மமான சிந்தனை. இதைத்தான் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள்” என மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.