கோப்புப் படம்
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலை சந்திக்க திமுக தீவிரமாக தயாராகிவருகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம்தோறும் மாநாடு நடத்த வேண்டுமென திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் முடிவுசெய்தார். முதல்கட்டமாக வடக்கு மண்டல மாநாடு திருவண்ணாமலையில் கடந்த டிசம்பர் 14-ம் தேதி நடத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் சுமார் 1.3 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அடுத்தகட்டமாக இளைஞரணியின் தென் மண்டல மாநாடு விருதுநகரில் ஜனவரி 24-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை இளைஞரணி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாநாட்டிலும் பங்கேற்க 1.5 லட்சம் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மத்திய மற்றும் மேற்கு மண்டலங்களுக்கான மாநாடுகளை ஒரேகட்டமாக சேர்த்து பிப்ரவரியில் நடத்துவதற்கும் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.