புதுச்சேரி: “நீதிமன்றம் மூலம் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம். நாடாளுமன்றத்திலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்று திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்பி தெரிவித்தார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சேதுசெல்வத்தை ஆதரித்து, அத்தொகுதிக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்பி, துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இன்று வாக்கு சேகரித்தனர்.
பிரச்சாரத்தின் இடையே செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி, “புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.
தமிழகத்தில் திமுக இல்லையென்றால் காங்கிரஸ் இல்லை. காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரத்தில் அக்கட்சியின் தலைவர்கள் புகைப்படம் இல்லாமல் தமிழக முதல்வர் விஜய்யின் புகைப்படம் மட்டுமே முன்னிறுத்தப்படுவதை பார்க்கும்போது காங்கிரஸ் கட்சிக்கு விஜய் தான் தலைவராகி உள்ளார் என்று நினைக்கிறேன்.
40 ஆண்டுகள் சேதுசெல்வம் சாதாரண தொண்டனாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அவர், இத்தோகுதியில் போட்டியிட்டு வெற்றியை இழந்திருக்கிறார். ஆகவே தொகுதி மக்கள் ஒவ்வொருவரும் இந்த முறை அவருக்கு வாக்களிப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள்.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் விஜய் அலை வீசுவதாக கனவு காண அவர்களுக்கு உரிமை உள்ளது. புதுச்சேரியில் ஒரு சாதனையையும் பார்க்க முடியவில்லை. தட்டாஞ்சாவடி தொகுதியில் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. சிறு மழை பெய்தால் கூட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
புதுச்சேரியில் தற்போதைய சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது. கடந்த 3 நாட்களில் 3 கொலைகள் நடந்துள்ளன. தொகுதியில் அடிப்படை வசதிகள் மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாற்றம் தேவை.
தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள், ஏராளமான தொழிற்சாலைகளை கொண்டு வந்துள்ளார். புதுச்சேரியில் அப்படி என்ன வந்துள்ளது? எதுவும் வேண்டாம். மாநில அந்தஸ்தை வாங்கி கொடுக்கலாமே. மாநில அந்தஸ்து வந்தால் நமக்கு தேவையான நிதி கிடைக்கும்; வளர்ச்சி இருக்கும்.
மத்திய அரசோடு சேர்ந்து இவர்களால் மாநில அந்தஸ்து வாங்கி கொடுக்க முடியவில்லை. புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாங்கள் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறோம். எங்கள் தலைவர் ஸ்டாலின், அதற்கு அனுமதி அளித்திருக்கிறார். நீதிமன்றம் மூலம் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம். நாடாளுமன்றத்திலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்றார்.
திமுக துணை பொதுச் செயலாளர் பொன்முடி கூறும்போது, “தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் திமுகவுக்குத்தான் வாக்களிப்போம் என்று உறுதியாக சொல்கிறார்கள். இங்குள்ள ஆட்சியின் அவலங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். நிச்சயம் வேட்பாளர் சேதுசெல்வம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்று தெரிவித்தார்.