எழுபது நாட்களாக காத்திருந்தும் எங்களை திமுக இன்னும் அழைக்கவில்லை என்று வருத்தப்படுகிறது காங்கிரஸ் கட்சி. இருந்த போதும் பிப்ரவரி 22-ம் தேதிக்கு மேல் பேசிக்கொள்ளலாம் என நிதானம் காக்கிறது திமுக.
“முட்டையிட்டு குஞ்சு பொரிச்சு காப்பாத்துற கோழிக்குத் தானே அதிலுள்ள வலி வேதனை தெரியும்” என்று கிராமங்களில் சொல்வார்கள். அதுபோல ஆட்சியை மீண்டும் தக்கவைக்க வேண்டுமே என்ற பதைபதைப்பில் இருக்கும் திமுக-வுக்குத்தான் கூட்டணியை கட்டமைத்துக் கொண்டு சொல்வதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள் புரியும்.
ஆனால், இது புரியாமல் காங்கிரஸ்காரர்கள், கூடுதல் தொகுதிகள், அதிகாரத்தில் பங்கு என்றெல்லாம் ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கட்சியை வளர்த்தெடுக்க வேண்டியது முக்கியம் தான். ஆனால், தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு அதிகாரத்தில் பங்குபெற்றால் மட்டுமே கட்சியை வளர்த்தெடுத்துவிட முடியும் என்பது தமிழக காங்கிரஸாருக்கு யார் கொடுத்த ஃபார்முலா என்று தெரியவில்லை.
2021-ல் ஆட்சிக்கு வந்த நாள் முதலே திமுக-வுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது பாஜக. ஆனால், அந்தக் கட்சி எடுத்துக் கொண்ட முயற்சிகளில் 10 சதவீத அளவுக்குக்கூட காங்கிரஸார் தங்கள் கட்சியை வளர்ப்பதற்கு மெனக்கிட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், இப்போது தேர்தல் வருகிறது என்றதும் ஆளாளுக்கு வரிசைகட்டி வருகிறார்கள்.
“கூட்டணியை குலைப்பதற்கு எந்த ரூபத்திலும் சதி நடக்கலாம். அதனால் கூட்டணி குறித்து பொதுவெளியில் யாரும் பேசாதீர்கள்” என்று தங்களின் தலைவர் ஸ்டாலின் சொன்னதற்கு கட்டுப்பட்டு திமுக-வினர் அமைதி காக்கிறார்கள். ஆனால், டெல்லி தலைமையே சொன்ன பிறகும் தமிழக காங்கிரஸார் தடதடப்பதைப் பார்க்கையில், ‘நாங்கள் சொல்வதைச் சொல்கிறோம்... நீங்கள் செய்வதைச் செய்யுங்கள்’ என்று காங்கிரஸ் தலைமையும் சிக்னல் கொடுத்துவிட்டதோ என சந்தேகப்படத் தோன்றுகிறது.
அதிமுக கூட்டணிக்கு அச்சாரம் போட்ட நேரத்திலேயே, “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று சொன்ன பாஜக-வே இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, “அதிகாரத்தில் பங்கு கேட்கும் திட்டமெல்லாம் எங்களுக்கு இல்லை” என பதவிசு காட்டுகிறது. அதற்காக, அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், எங்களுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டாம் என்று பாஜக அப்படியே ஒதுங்கிப் போய்விடும் என்று அர்த்தமல்ல.
இப்போதைக்கு அடக்கி வாசிப்போம். அதிகாரப் பகிர்வு குறித்து தேர்தல் முடிவுகள் வந்ததும் ‘அமித் ஷா ரூட்டில்’ பேசிக்கொள்ளலாம். இப்போதே அதுபற்றி லாவணி பாடி தேவையற்ற சர்ச்சைகளை வளர்க்க வேண்டாம் என்பதே பாஜக-வின் திடீர் பதுங்கலுக்குக் காரணம். ஆனால், இந்த புரிதல் கூட இல்லாமல் திமுக-வோடு காங்கிரஸ் கச்சைகட்டுகிறது.
தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸுக்கு நம்பிக்கையான பார்ட்னராக தோள்கொடுத்து நிற்கிறது திமுக. தமிழகத்தில் திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸை கழட்டிவிட்டால் தேசிய அளவில் இண்டியா கூட்டணியே பிரித்துக் கொட்டிய நெல்லிக்காய் மூட்டை கணக்காகி விடும் என கணக்குப் போடுகிறது பாஜக. ஆக, திமுக கூட்டணியை விட்டுப் பிரிந்தால் தேசிய அளவில் காங்கிரஸ் தங்களுக்கான பலத்தை இழக்க நேரிடும். இந்த உள்ளடிகளை எல்லாம் உணர்ந்தோ அல்லது உணராமலோ காங்கிரஸார் உரிமைநாதம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசு நிர்வாகத்தை நடத்திக் கொண்டே டிசம்பருக்கு முன்பே தேர்தல் ஆயத்தப் பணிகளை தொடங்கிவிட்டது திமுக. மாநாடுகள், கூட்டங்கள், அரசு நிகழ்ச்சிகள் என தினமும் ஏதாவது ஒரு நிகச்சியின் மூலம் மக்களோடு நேரடித் தொடர்பில் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த நேரத்தில், கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கி அதன் மூலம் கலகக்காரர்களின் கையில் நாமே கத்தியைக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.
திமுக-வை மட்டுமல்லாது திமுக கூட்டணியையே சேஃப் ஸோனில் வைத்திருக்க வேண்டும் என்ற அக்கறை அவரது இந்த அணுகுமுறையில் தெரிகிறது. அதனால் தான் காங்கிரஸார் கொடுக்கும் குடைச்சல்களுக்குக் கூட அவர் பெரிதாக ரியாக்ட் செய்யாமல் இருக்கிறார். காங்கிரஸ் தயவில் தான் திமுக ஆட்சி நிலைக்கும் என்ற சூழல் அமையுமானால், அப்போது காங்கிரஸுக்கு அதிகாரத்தில் பங்கு கொடுக்காமல் எங்கே போய்விடும் திமுக?