சென்னை: மாமல்லபுரத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜகவின் தொகுதி மறுவரையறை மசோதாவை யார் ஆதரித்தாலும், தமிழகத்துக்கு துரோகம் செய்கிறவர்கள்'' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் எக்ஸ் வலைதளப்பதிவில், “நம்பிக்கையை விற்று, பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள். தமிழகத்துக்கு வந்துவிட்டு காவிரி உரிமைகள் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்.
காவிரியில் தமிழகத்தின் உரிமையை காவுவாங்கும் மேகேதாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் துரோகிகள். நீட் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தாமல், தேர்வில் முறைகேடு நடப்பதாக மட்டும் பேசுகிறவர்கள் துரோகிகள்.
பாஜகவின் குதிரை பேரங்களை கண்டிக்கிறவர்கள், தவெகவின் குதிரை பேரங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே.
தமிழகத்துக்கு வந்து ஒருவர் அரசியல் பாடம் எடுத்ததை படித்த போது, இதெல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.