பிரதிநிதித்துவப் படம்
புதுச்சேரி: அரிசி விலை உயர்வால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ள நிலையில், மீண்டும் புதுச்சேரியில் ரேஷன் கடை மூலம் தரமான அரிசி வழங்க திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா கூறியது: “புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அரசு, நிலுவையில் இருந்த 6 மாதங்களுக்கான இலவச அரசிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் பணத்தை வரவு வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு விலைவாசியின் அடிப்படையில் ரூ.43-க்கு ஒரு கிலோ அரிசி ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. பின்னர் ரேஷன் அரிசியில் ஊழல் நடந்ததால் அரிசிக்கு பதில் பணம் வழங்கப்படுகிறது.
தற்போதைய வெளிச்சந்தையில் ரூ.80 முதல் ரூ.100 வரை அரிசி விலையும், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ளதை அரசு கவனத்தில் கொள்ளாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
விலைவாசி உயர்வை அரசு கட்டுப்படுத்த தவறியதால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்துள்ளது. இத்தகைய மிகக் கடுமையான விலைவாசி உயர்வுக்கு இடையில், அரசு வழங்கும் இந்த மிகக் குறைந்த தொகை பொதுமக்களின் ஒரு வாரக் காலத் தேவைக்கு கூடப் போதுமானதாக இருக்காது.
மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கினால் ஆண்டுதோறும் விலைவாசி அதிகரிப்புக்கு ஏற்ப டெண்டர் மாற்றி அமைக்கப்படும். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் டெண்டர் விடப்படுவதால் அதை எடுப்பவர்களும் விலைவாசி உயர்வால் எடுத்த டெண்டரை ரத்து செய்து விடுகின்றனர்.
இதனால் அரிசி காலத்தோடு கிடைக்காமல் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். மேலும், அதிகரித்து வரும் அரிசி விலையேற்றத்தால் பொதுமக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர் என்பதை அரசு உணர வேண்டும்.
வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் முறையைக் கைவிட்டு, நியாயவிலைக் கடைகள் மூலமாக தரமான அரசியை மக்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும். அப்படிச் செய்தால் மக்களும், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ரேஷன் கடை ஊழியர்களும் பயன்பெறுவார்கள்.
ஒருவேளை நிர்வாகக் காரணங்களால் அரிசி வழங்கத் தாமதமானால், தற்போதைய கடுமையான விலைவாசி அதிகரிப்புக்கு ஏற்ப விலையை ஒட்டி கூடுதல் தொகையை மக்கள் வங்கிக் கணக்குகளில் உடனடியாக செலுத்த வேண்டும். அதேபோல் தீபாவளி தொகுப்பு பெரும்பாலான தொகுதிகளில் இன்னும் தொடங்கப்படவில்லை” என்று அவர் குற்றம்சாட்டினார்.