அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்
மதுரை: “திமுக தூண்டுதலின்பேரில் தவெக அரசுக்கு எதிராக குழப்பம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது” என்று மின்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் தமிழக மின்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தவெக ஆட்சிக்கு வந்துவிட்டதால் திமுகவினர் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர். எங்கள் கூட்டணி கட்சியான விசிகவினருடன் திமுகவினர் தகராறு செய்கின்றனர். திமுக தூண்டுதலின் பேரில் தவெக அரசுக்கு எதிராக குழப்பம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது, அவர்களின் உட்கட்சி பிரச்சினை. அவர்களின் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியில் ராஜினாமா செய்துள்ளனர். அதற்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை.
மின்துறையில் கணக்கீட்டாளர்கள் 7,000 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 1,500 ஊழியர்கள் தான் இருக்கின்றனர். 4,500 பணியிடங்கள் காலியாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. மின்தடையை சரி செய்யும் பணி நடக்கிறது. மின்துறையில் ஊழல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே மின்மாற்றி ஊழல் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
அரசு வழக்கறிஞர், மாவட்ட வழக்கறிஞர் நியமனம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. அரசு சட்டக் கல்லூரி, தனியார் சட்டக் கல்லூரிகளில் உள்ள விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசு சட்டக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும்” என்று கூறினார்.