சென்னை: முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து செப்.12-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை: திரையுலக கவர்ச்சி மூலமாக மக்களை மயக்கி, போலியான பிம்பத்தை சமூக ஊடகங்களின் மூலமாகக் கட்டமைத்து, குழந்தைகளை ஏமாற்றி குடும்பத்துக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி, போலி வாக்குறுதிகள் அளித்து ஆட்சியை தவெக கைப்பற்றியது.
திமுக கூட்டணியில் வென்றவர்களுக்கு அமைச்சர்கள் பொறுப்புகளை கொடுத்து அவர்களது ஆதரவைப் பெற்று, அதிமுக சார்பில் வென்றவர்களுக்கும் அமைச்சர் பதவி தருவதாக ஏமாற்றி குதிரை பேரம் நடத்தி, முதல்வராகி இருக்கிறார் நடிகர் விஜய்.
மக்களுக்கு கொடுத்த வாக்கு றுதிகளை நிறைவேற்றவில்லை. மாநிலத்தில் கொலை-கொள்ளை, போதைப் பொருள் நடமாட்டம் - பாலியல் வன்முறைகள் அதிகமாகி விட்டன.
பல்வேறு குற்றச்செயல்களில் தவெக நிர்வாகிகளே சிக்கி வருகிறார்கள். ‘தெரியாமல் ஓட்டுப் போட்டுவிட்டோம்’ என்று மக்கள் வருந்திச் சொல்லி வருகிறார்கள்.
இதிலிருந்து திசை திருப்பு வதற்காக ‘டயலாக் சூட்டிங்’ மேடையாக சட்டப்பேரவையை முதல்வர் மாற்றிவிட்டார். கருணாநிதி, முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் ஆகியோரை கொச்சைப்படுத்தி சட்டப்பேரவையில் விஜய் பேசிய பேச்சுகள் கண்டிக்கத்தக்கது. இதன்மூலமாக சட்டப்பேரவையின் மாண்பு, மரபு, வரலாறு இவை அனைத்தும் காற்றில் பறக்கின்றன.
ஆட்சியின் தோல்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்ள, கொச்சையான பேச்சுகளைப் பேசும் தரமற்ற மனிதராக முதல்வர் விஜய் மாறியிருக்கிறார்.
இவரது பேச்சைக் கண்டிக்கும் வகையில், திமுக சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் செப்.12-ம் தேதி, மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.