கரூர் கூட்ட நெரிசல் நிகழ்வு ஏற்பட்ட தருணம்

 
தமிழகம்

சாட்சிகளின் சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை: கரூர் நெரிசல் வழக்கு மேற்பார்வை குழுவுக்கு திமுக கோரிக்கை

அனலி

சென்னை: கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சாட்சிகளின் சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மேற்பார்வைக் குழுவுக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள குழுவுக்கு மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், 10.07.2026 (நாளை) அன்று முதல்வர் சி. ஜோசப் விஜய் கரூர் சென்று தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையிலான அரசுப் பணிக்கான பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

இந்நிலையில், நடைபெற்று வரும் விசாரணையில் சாட்சிகளாக உள்ள அந்தக் குடும்பத்தினர் மீது எந்தவிதமான செல்வாக்கும் செலுத்தப்படவோ, அவர்களுடன் தலையீடு மேற்கொள்ளப்படவோ கூடாது என்பதற்கான போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும் சிபிஐயும் மேற்கொள்ளுமாறு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 07.07.2026 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், சட்டரீதியான தீர்வுகளை நாடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதையும், இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே மேற்பார்வைக் குழுவிடம் மனு தாக்கல் செய்திருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு அரசின் நிவாரணம், கருணை அடிப்படையிலான பணி நியமனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு தமக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றும், ஆனால் சிபிஐ விசாரணைக்கு உட்பட்ட அதே சம்பவத்தின் முக்கிய சாட்சிகளுக்கு வழங்கப்படும் நலன்கள் தொடர்பாக - சாட்சிகளுடன் அரசு நிர்வாகம் நேரடியாக தொடர்புகொள்வது, விசாரணையின் சுதந்திரம் மற்றும் நியாயத்தன்மை குறித்து நியாயமான ஐயத்தை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, இவ்வழக்கின் சாட்சிகள் மீது இந்த நலத்திட்ட உதவிகளால் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் மேற்பார்வைக் குழுவைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT