கோட்டை வடிவ மாநாட்டு முகப்பு. | படம்: ர. செல்வமுத்துகுமார் |
திருச்சி: திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று (மார்ச் 9) திமுக மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சித் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில், ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் திருச்சி சிறுகனூரில் தேர்தல் அரசியல் மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதற்காக திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து திமுக ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் கூறியது: சிறுகனூர் மாநாட்டுக்காக 500 ஏக்கரில் மாநாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 200 ஏக்கரில் மாநாட்டு அரங்கமும், 240 அடி நீள பிரம்மாண்ட மேடையும் பிரம்மாண்ட எல்இடி திரையும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, மாநாட்டுத் திடலில் 168 இடங்களில் எல்இடி திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. கோட்டை வடிவில் 1,000 அடி நீளத்துக்கு பிரம்மாண்ட முகப்பு அமைக்கப்பட்டு பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளன. மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
3.60 லட்சம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. 48 நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வருவோருக்கு குடிநீர் பாட்டில் அடங்கிய பை வழங்கப்படுகிறது. மேலும், மாநாட்டு திடலில் 4 லட்சம் பேருக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று திருச்சி வருகிறார். மாநாட்டு வளாகத்தின் முகப்பில் உள்ள 100 அடி உயரகொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றுகிறார். மாநாட்டு அரங்குக்குள் காரில் நின்றவாறு நிர்வாகிகள் அளிக்கும் வரவேற்பை ஏற்றுக் கொண்டவாறே மாநாட்டு அரங்குக்குள் செல்கிறார்.
அங்கிருந்து 600 அடி நீள ரேம்பில் நடந்து மேடைக்குச் செல்கிறார். 2021-ம் ஆண்டைப்போல இந்த மாநாட்டிலும் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட உள்ளார். இதில், 60 வயதைக் கடந்த மூத்த ஆண்களுக்கு இலவச பேருந்து வசதி உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெறும் எனத் தெரிகிறது.
ஹேஸ்டேக்
மாநாட்டில் ‘ஸ்டாலின் அலை 2026’ (stalin wave 2026) என்ற பிரத்யேக ஹேஸ்டேக் இன்று காலை வெளியாக உள்ளது. இதனை எக்ஸ் தளம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், சமூக ஊடகங்களில் டிரென்ட் செய்வதற்காக பிரத்யோக ‘வார் ரூம்’ மாநாடு அரங்குக்கு பின்னால் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக திமுக ஐடி விங்க் தொண்டர்கள் 500 பேர் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு லேப்டாப், கம்ப்யூட்டர் மற்றும் இன்டர் நெட் வசதிகள் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மாநாட்டை சமூக ஊடகங்களில் நேரலை செய்வதற்காக மாவட்டம்தோறும் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ள 1,000 பேரின் பக்கங்களை பயன்படுத்த ஐடி விங்க் ஏற்பாடு செய்துள்ளது.
ரம்ஜான் தொழுகை
மாநாட்டு வளாகத்தில் முக்கிய விருந்தினர்கள் அமர தனித்தனி அரங்குகள், உணவுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரமலான் நோன்பு காலம் என்பதால், முஸ்லிம்கள் தொழுகை நடத்த வசதியாக தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
10 மருத்துவக் குழு, ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மாநாடு அரங்கம் மற்றும் வாகனம் நிறுத்தும் பகுதிகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
மாநாடுக்கு வரும் வாகனங்களை நிறுத்த 15 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கு செல்வதற்காக மேப்புடன் கூடிய க்யூஆர் கோடு அனுப்பப்பட்டுள்ளது. இதனை செல்போனில் ஸ்கேன் செய்தால், வாகன நிறுத்தும் இடங்கள் தெரியும். இதனால், போக்குவரத்து இடையூறின்றி வாகனங்கள் செல்ல முடியும்.