டி.கே.எஸ் இளங்கோவன்
சென்னை: “திமுக - காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தை சுமுகமாக முடிக்கவே எங்கள் தலைவர் விரும்புவார். இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும். பாஜகவை எதிர்த்துப் பேச விஜய் பயப்படுவார்” என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அவர்கள் (காங்கிரஸ்) கேட்பது வேறு, நாம் (திமுக) சொல்வது வேறு. திமுக - காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தை சுமுகமாக முடிக்கவே எங்கள் தலைவர் (முதல்வர் ஸ்டாலின்) விரும்புவார். காங்கிரஸார் இப்போது பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறார்கள் என்றாலே பழைய நிலைப்பாட்டில் இருந்து மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் பொருள். இன்று மாலைக்குள் நல்ல செய்தி வரும்.
தவெகவினருக்கு அரசியலே தெரியாது. விஜய் முதல்வராக வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு வந்திருக்கிறார். அவரின் கேள்விகளுக்கு நாங்க பதில் கூற முடியாது. அவர் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென அரசியலுக்கு வரவில்லை. தைரியம் இருந்தால் விஜய் மணிப்பூரை பற்றி பேசட்டும். பாஜகவை எதிர்த்துப் பேச விஜய் பயப்படுவார்” என்றார்.
நாங்குநேரி கொலை சம்பவம் குறித்து கூறும்போது, “சட்டம் தன் கடமையை செய்கிறது. எந்தக் குற்றவாளியும் தப்பிக்கவில்லை. எடப்பாடி முதல்வராக இருந்த காலத்தில், கோடநாட்டில் கொள்ளையடித்தவர்கள் கூட தப்பிவிட்டார்கள். திமுக ஆட்சியில் காவல் துறைக்கு ஒரு புகார் வந்தால் கூட, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.