அண்ணா அறிவாலயம்

 
தமிழகம்

தவெக கும்பல் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’களாக அவதாரம்: உதயநிதி கைதுக்கு திமுக எதிர்வினை

தமிழினி

சென்னை: ‘காவிரி விவகாரத்தில் தனது கையாலாகாத்தனத்தை மறைக்கவும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளை எதிர்கொள்ள பயந்தும் உதயநிதி ஸ்டாலினை தவெக அரசு பொய் வழக்கில் கைது செய்ய முயல்வதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. அடக்குமுறைகளால் திமுகவை ஒருபோதும் முடக்க முடியாது’ என்று அக்கட்சி எச்சரித்துள்ளது.

இது குறித்து திமுக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘காவிரி பிரச்சினைக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசு மீது, எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த எந்த விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல வக்கற்ற தவெக அரசு, பொய்வழக்கு போட்டு தன் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் யார் பெயரையும் குறிப்பிடாமல் காவிரி பிரச்சினை குறித்து பேசியதை, ‘ஆபாசமாகப் பேசினார்’, ‘இரட்டை அர்த்தத்தில் பேசினார்’ என்று திரிப்பது யார்?

‘வாயில நல்லா வந்துடும்’, ‘கவர்ச்சி காட்ட நான் என்ன ….வா?’, ஒரு டேஷும் இல்லை’ என்று ஆபாசமாகப் பேசித்தள்ளும் டேஷ் டேஷ் முதல்வர், தன் சொந்த கட்சிக்காரரையே ‘ஜட்டியுடன் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அடிப்பேன்’ என்று சொல்லும் அமைச்சர் ஜெகதீஸ்வரி, ராகுல் காந்தியையும் பிரியங்கா காந்தி மகளையும் ஆபாசமாக சித்திரித்த ‘பலகட்சி மாறி’ சி.டி.நிர்மல்குமார், நாள்தோறும் பாலியல் வழக்குகளில் கைதாகும் குற்றவாளிகளின் கூடாரமான தவெக இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’களாக அவதாரம் எடுத்திருக்கிறார்கள்.

சோஃபா மாடல் முதல்வர் விஜய்யின் படங்களிலும் பாடல்களிலும் உள்ள இரட்டை அர்த்த வரிகள், ஆபாசக் காட்சிகளைத் தொகுத்தால் அது மாபெரும் ஆபாச குடோனாக இருக்குமே, அரசியலுக்கு வந்து கடைசிப்படம் என்று அறிவித்த திரைப்படத்திலும் வாய் கூசாமல் கெட்டவார்த்தை பேசிய விஜய்தான் ஒழுக்க காவலரா?

இதே விஜய்யை நேரடியாக ஒரு நடிகையுடன் இணைத்துப் பேசிய பாஜக மாநிலச்செயலாளர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம்கூட தெரிவிக்காத தவெக இப்போது எதிர்க்கட்சித் தலைவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது.

‘மேகேதாட்டு அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை’ என்று சொன்ன பாஜக அரசின் அமைச்சரைக் கண்டித்து, டெல்லிக்குப் போராடச் சென்ற விவசாயிகளைக் கைது செய்த மகாராஷ்டிரா காவல் துறையைக் கண்டித்து, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி வந்தே மாதரத்தைத் திணிக்கும் ஆளுநர்- ஒன்றிய அரசைக் கண்டித்து எல்லாம் போராடத் துணியாத தவெக, எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக மட்டும் போராடுகிறது.

நேற்று புகார், இன்று எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்ய அவசர முயற்சி. ‘குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறை செய்த குற்றவாளிகளைக் காப்பாற்றியவர்’ என்று பாதிக்கப்பட்ட பெண்ணே குற்றம் சாட்டியும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்கத் துப்பில்லாத பாசிச தவெக அரசு, அவசர அவசரமாக எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்கிறது.

அரை நூற்றாண்டு உரிமைப் போராட்டத்தை பின்னுக்குத் தள்ளி காவிரி பிரச்சினையில் கையாலாகாத்தனமாக செயல்பட்ட தவெக அரசின் மீது எதிர்க்கட்சித்தலைவர் முன்வைத்த எந்த குற்றச்சாட்டுகளுக்காகவது பதில் சொல்ல திராணி இருக்கிறதா?

நாளை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பப்போகும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லமுடியாது என்ற அச்சத்தில் கைது செய்திருக்கும் பாசிச தவெக அரசே. கைது நடவடிக்கைகளால் எங்கள் இளைஞர் அணிச் செயலாளரையோ திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் மகத்தான இயக்கத்தையோ முடக்கிவிட முடியாது.

எத்தனையோ கைதுகள், சிறைச்சாலை சித்திரவதைகள், ஒடுக்குமுறைகளைக் கண்ட இயக்கம் திமுக. பாசிச தவெக அரசை வீழ்த்தி ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்’ என்று திமுக கூறியுள்ளது.

SCROLL FOR NEXT