தமிழகம்

திருப்பரங்குன்றம் தீபத் தூணை ‘சர்வே தூண்’ என்பதா? - கனிமொழி மீது வானதி சீனிவாசன் காட்டம்

டி.ஜி.ரகுபதி

கோவை: “இந்துக்களின் உணர்வுகளோடு திமுக விளையாட வேண்டாம்” என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் மதப் பிரச்சினை இல்லாமல் அமைதிப் பூங்காவாக உள்ளது. இதை சீர்குலைக்க பாஜக, ஆர்எஸ்எஸ் தொடர்ந்து முயற்சிக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் நிலத்தை அளப்பதற்காக வைக்கப்பட்ட சர்வே தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கோருவது இந்துக்கள் மனதை புண்படுத்தக் கூடியது என திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கூறியிருக்கிறார்.

அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மத பயங்கரவாதம் புகுந்ததே திமுக ஆட்சியில்தான். 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தமிழக வரலாற்றில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத சம்பவம்.

இலங்கை தமிழர் அமைப்பின் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட 12 பேர் 1990-ம் ஆண்டு சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது திமுக ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது. இந்த சம்பவமே முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு காரணமாக அமைந்தது.

இவற்றையெல்லாம் தமிழக மக்கள் மறந்திருப்பார்கள் என நினைத்து, தமிழகத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்தியது திமுக தான் என அடித்து விட்டிருக்கிறார் கனிமொழி.

திருப்பரங்குன்றத்தில் திருக்கோயிலுக்குச் சொந்தமான கந்தர் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் பிரச்சினை நீதிமன்றத்துக்கு வந்தே 100 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அங்கு தீபம் ஏற்றப்பட்டது நிறுத்தப்பட்டது முதலே, அந்த உரிமைக்காக இடைவிடாது போராடி வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருநாளில் போராட்டம் நடக்காத ஆண்டே இல்லை. இதையெல்லாம் மறைத்து விட்டு தீபத் தூணை, சர்வே தூண் என இந்துக்களை அவமானப்படுத்தியுள்ளார் கனிமொழி.

நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறிய பிறகு அது இந்து விரோத இயக்கமாக மாறியது. திமுகவின் கொள்கை நீர்த்துப் போய்விட்டது. ஆரிய - திராவிடம், வடக்கு - தெற்கு என பேசி, மக்களிடம் இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத சிந்தனையை விதித்து அதில் குளிர்காய்ந்து வருகிற கட்சிதான் திமுக.

பிரிவினை சித்தாந்தத்தை வைத்தே மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என கனவு காண வேண்டாம். முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தபோது அவரது உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய நள்ளிரவில் உயர் நீதிமன்றம் சென்று உத்தரவைப் பெற்றது திமுக. அப்போது நீதிமன்ற தீர்ப்பை அன்றைய மாநில அரசு ஏற்காமல் போயிருந்தால் திமுகவுக்கு எப்படி இருந்திருக்கும்?

திமுகவுக்கு ஒரு சென்டிமென்ட் இருப்பதுபோல இந்துக்களுக்கு திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது சென்டிமென்ட். இந்துக்களின் உணர்வுகளோடு திமுக விளையாட வேண்டாம். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் உரிமையை இந்துக்கள் வென்றே தீருவார்கள். அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என்று வானதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT