திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கம்யூனிஸ்ட், கொமதேக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 26 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இதில் காங்கிரசுக்கு 28, முஸ்லீம் லீக், மமக-க்கு தலா 2 இடங்கள் ஓதுக்கப்பட்டுள்ளன. இதர கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில், திமுக-மார்க்சிஸ்ட் இடையேயான 2-ம்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. திமுகவில் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவும், மார்க்சிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அப்போது, மார்க்சிஸ்ட் 8 தொகுதிகளை கேட்டதாகவும், அதற்கு 6 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக ஒப்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை மீண்டும் இன்று (மார்ச் 11) தொடர்கிறது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறும்போது, “இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக கூறிய எண்ணிக்கையில் உடன்பாடு இல்லை.
கடந்த முறை கொடுக்கப்பட்ட எண்ணிக்கையைவிட கூடுதலாக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். திமுக தலைவருடன் கலந்தாலோசித்த பின்னர் இன்று பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பதாக தெரிவித்துள்ளனர்”என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட்: இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில், கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் என்ன முடிவு செய்யப்பட்டுள்ளது, மக்களிடம் நிதி வசூல் பெறுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
கடந்த தேர்தலில் போட்டியிட்ட 6 இடங்களில் ஒன்றை குறைத்து தருவதாக திமுக தெரிவித்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து இந்திய கம்யூ. 7 இடங்களை கேட்டுள்ளது. அதன்படி 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடந்த தேர்தலை போல் தலா 6 இடங்களுக்கு பேசி முடிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.