திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.
திருச்சி: திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக நுழைவு வளைவில் இந்தியில் பெயர் எழுதப்பட்டதை எதிர்த்து, அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு அண்மையில் புதிதாக நுழைவு வளைவு கட்டப்பட்டது.
அதில், இந்த அலுவலகத்தின் இந்தி பெயரான ‘கர்தவ்ய த்வார்’ என்கிற வாசகத்தை இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய எழுத்துகளைக் கொண்டு எழுதியுள்ளனர்.
தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் இந்தியில் பெயர் அமைத்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகத்தினரை கண்டித்து திருச்சியில் திமுகவினர் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி ஜங்சன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பு நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமை வகித்தார். மேற்கு மாநகர செயலாளர் மேயர் மு.அன்பழகன் முன்னிலை வகித்தார்.
மேலும், நுழைவு வாயில் கல்வெட்டில் இருந்த இந்தி எழுத்தை கருப்பு பெயின்ட் கொண்டு அழித்தனர். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இப்போராட்டத்தில் மத்திய மாவட்ட பொருளாளர் துரைராஜ், துணைச் செயலாளர் முத்துச்செல்வம், பகுதி செயலாளர் காஜாமலை விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, “இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பாஜக. திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என எழுதி வைத்துள்ளனர்.தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பாஜக அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.