சட்டப்பேரவையில் மிசா குறித்து முதல்வர் விஜய் பேசியதைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா நுழைவாயில் அருகே நேற்று நடைபெற்றது. இதில், ஆ.ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மு.க.தமிழரசு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். படம்: எல்.சீனிவாசன்

 
தமிழகம்

முதல்வர் விஜய்யின் ‘மிசா’ பேச்சுக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவையில் எமர்ஜென்சி, மிசா தியாகங்களைக் கொச்சைப்படுத்திப் பேசியதாக, முதல்வர் விஜய்யைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 7-ம் தேதி திமுக தலைவர்கள் குறித்தும் மிசா வரலாறு குறித்தும் முதல்வர் விஜய் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து விஜய்யைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி மாநிலம் தழுவிய அளவில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் நேற்று ஈடுபட்டனர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர்கள் பி.கே. சேகர்பாபு, ஆர்.டி.கே. சேகர், மாதவரம் சுதர்சனம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் பி.கே. சேகர்பாபு, “மிஸ்டர் கிளீன் என்பதற்கு முழு சொந்தக்காரர் எங்களுடைய தலைவர். அன்றைய ஆளுநரை அவர் ஓடவிட்ட நிலையில், இன்று முதல்வர் விஜய்யை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஓடவிடுகிறார். உதயநிதியின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல தைரியம் இல்லாத முதல்வராக விஜய் இருக்கிறார். திமுக இன்று அடிபட்ட புலியாகக் களத்தில் நிற்பதால் நிச்சயம் ஒருநாள் இதற்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்துக் கொடுப்போம்” என்றார்.

ஆர்.எஸ். பாரதி பேசும்போது, “விஜய்யின் அநாகரிகமான பேச்சு திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எமர்ஜென்சியின் போது 22 வயதேயான மு.க.ஸ்டாலின் சிரித்த முகத்தோடு சிறைக்குச் சென்றார்.

மெட்ராஸ் சென்ட்ரல் சிறையில், சிட்டி பாபுவின் டைரியில் பதிவாகியுள்ளபடி கொடூரமான அவமதிப்புகளை யும் சித்ரவதைகளையும் எதிர்கொண்டவர். ஸ்டாலின் மீது விழ வேண்டிய அடிகளை சிட்டி பாபு தன் உயிரைக் கொடுத்துத் தாங்கியதால்தான் அவர் உயிர் தப்பினார்.

கரூரில் அசம்பாவிதம் நடந்த போது பயந்துபோய் தனி விமானத்தில் தப்பி ஓடிய விஜய்க்கு, மிசா தியாகங்களைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை” என்றார். சென்னை தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு மாவட்டதிமுக சார்பில் சைதாப்பேட்டை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி பேசும்போது, “சட்டப்பேரவையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் பற்றி கேள்வி கேட்டால், அதற்கு பதில் சொல்ல முடியாமல் ஓடியவர் முதல்வர் விஜய். மிசாவைப் பற்றிப் பேச அவருக்கு என்னதகுதி இருக்கிறது. மிசா காலத்தில் நடந்த கொடுமைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷன் அறிக்கையிலேயே மூன்றாவது பெயராக ஸ்டாலின் பெயர் பதிவாகியுள்ளது” என்றார்.

இதேபோல் திருச்சியில் மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகில் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தலைமையிலும், விருதுநகர் தேசப்பந்து மைதானத்தில் முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

புதுக்கோட்டை திலகர் திடலில் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ரகுபதி தலைமையிலும், மதுரை கே.புதூர் பேருந்து நிலையம் அருகில் மதுரை மாவட்டச் செயலாளர் கோ. தளபதி தலைமையிலும், திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தலைமையிலும் என தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT