சென்னை: குதிரை பேரம் விவகாரம் தொடர்பாக, தவெக அரசுக்கு எதிரான வீடியோ ஆதாரங்களுடன் ஆளுநர் அர்லேகரை இன்று சந்தித்து மீண்டும் புகார் கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து, திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்தது.
அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்களும் தவெக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக, அதிமுகவில் இருந்து விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, மதுராந்தகம் மரகதம் குமாரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா ஆகிய எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர்.
பழனிசாமி குற்றச்சாட்டு
குதிரை பேரம் நடத்தி அதிமுக எம்எல்ஏக்களை தவெக விலைக்கு வாங்கிவிட்டதாக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக அதிமுக, திமுக, பாஜக தரப்பில் ஆளுநரிடம் தனித்தனியே புகாரும் அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், ‘‘தவெக தரப்பில் இருந்து எங்களை அணுகினர். அவர்களது அணுகுமுறை பிடித்திருந்ததால் இணைந்தோம்’’ என்று வெளிப்படையாகக் கூறினார்.
இந்நிலையில், இது தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரங்களை திமுக திரட்டியுள்ளதாகவும், அவற்றை ஆளுநர் அர்லேகரிடம் இன்று சமர்ப்பித்து, மீண்டும் புகார் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.