தமிழகம்

மதுரை மாவட்டத்தில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டம் - கூட்டணி கட்சிகள் தவிப்பு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாவட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதால் கூட்டணி கட்சியினர் தவிப்பில் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் கடந்த முறை திமுக, மதுரை வடக்கு, மேற்கு, கிழக்கு, மத்தி, திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.

மதுரை தெற்கு மதிமுகவுக்கும், திருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், மேலூர் காங்கிரஸுக்கும் ஒதுக்கப்பட்டன. இதில், கூட் டணிக் கட்சிகள் போட்டியிட்ட திருப்பரங்குன்றம், மேலூர் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. மதுரை தெற்கு தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் மதிமுக வேட்பாளர் பூமிநாதன் வெற்றிபெற்றார்.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியும், அக்கட்சிகளால் அதிமுகவை எதிர்த்து வெற்றி பெற முடியவில்லை என்ற அதிருப்தி திமுகவுக்கு ஏற்பட்டது. ஆனால், இந்த தொகுதிகளில் திமுகவினரே அதிமுக ஆதரவாக உள்ளடி வேலை பார்த்ததாக அப்போது சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் வரும் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற திமுக தலைமை திட்டமிட் டுள்ளது. அதற்காக, இந்த முறை திமுக குறைந்தபட்சம் 8 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த தொகுதிகள் பட்டியலை, உள்ளூர் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்து ஆலோசித்து திமுக தலைமை முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. அதனால், கடந்த முறை வழங்கிய ஒரு தொகுதியை எந்த கூட்டணி கட்சியிடம் இருந்து பெறலாம் என திமுக தலைமை உள்ளூர் அமைச்சர்கள், மாவட்டச் செய லாளர்களுடன் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி, இந்த முறை மதுரை மேற்கு, அல்லது தெற்கில் ஒரு தொகுதியையும், காங்கிரஸ் கட்சி வடக்கு தொகுதியையும், மதிமுக ஏற்கெனவே போட்டியிட்ட தெற்கு தொகுதியை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், ‘‘மதிமுகவுக்கு இந்த முறை, மதுரை மாவட்டத்தில் தொகுதி ஒதுக்குவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு கடந்த முறையை போல் திருப்பரங்குன்றமும், காங்கிரஸுக்கு மேலூர் தொகுதி யையும் ஒதுக்க ஆலோசித்து வருகிறது. வைகோ பெரிய அளவில் அழுத்தம் கொடுத்தால் மட்டுமே மதுரை மாவட்டத்தில் அந்தக் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படும்.

மதுரை மேற்கு தொகுதி அமைச்சர் பி.மூர்த்தியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் அங்கு திமுகதான் போட்டியிட வேண்டும் என்பதில் முடிவாக உள்ளனர். திமுக போட்டியிடும் மற்ற தொகுதிகளில் ஓரளவு வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர். தொகுதிகள் குறைந்தோ, மாறியோ வழங்கப்பட்டுவிடுமோ என்ற தவிப்பில் திமுக கூட்டணிக் கட்சிகள் உள்ளன என்றனர்.

SCROLL FOR NEXT