சட்டப் பேரவைத் தேர்தலில் தங்கள் கட்சியில் யாரெல்லாம் ஜெயிக்க வேண்டும், எத்தனை இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதை எல்லாம் விட யாரை எல்லாம் ஜெயிக்கவிடக் கூடாது என்பதில் திமுக தலைமை இம்முறை உறுதியான முடிவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி திமுக தலைமையின் நாக்-அவுட் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சுட்டுகிறார்கள்.
இதுகுறித்து திமுக தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக இதுவரை 3 விதமான சர்வேக்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், தலைவர் ஸ்டாலினே தனது நேரடிப் பார்வையில் வேட்பாளர் தேர்வை இறுதி செய்து வருகிறார்.
எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜக இம்முறை திமுக-வுக்கு குடைச்சல் கொடுத்து வருவதால் அந்தக் கட்சிக்கு கடந்த முறை கிடைத்த 4 தொகுதிகள்கூட கிடைக்கக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார் தலைவர். அதற்கேற்ப, பாஜக முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் முடிந்தவரைக்கும் திமுக வேட்பாளர்களையே களமிறக்குவது என்ற திட்டத்தையும் வைத்திருக்கிறது திமுக.
நெல்லையில் ஒரு தொகுதியில் திமுக தோற்றால்கூட நெல்லை திமுக-வை கூண்டோடு கலைத்து விடுவேன் என்று ஏற்கெனவே ஒன் டு ஒன் சந்திப்பில் கட்சியினரை ஸ்டாலின் எச்சரித்து அனுப்பினார். அந்த வகையில், பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரனை எப்படியும் தோற்கடித்தாக வேண்டும் என நினைக்கும் தலைவர், அதற்கான வியூகங்களையும் வகுத்து வருகிறார்.
2024 மக்களவைத் தேர்தலில் நயினார் தோற்றிருந்தாலும் வெற்றிக்கு மிக அருகில் வந்திருந்தார். நெல்லை சட்டமன்றத் தொகுதியில் முக்குலத்தோர் வாக்குகளை விட பிள்ளைமார் சமூகத்தினரின் வாக்குகள் அதிகமாக உள்ளன. 2021 தேர்தலில் பிள்ளைமார் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் நயினார் நாகேந்திரனுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தன. அதை கணக்கில் கொண்டு இம்முறை அதே சமுதாயத்தை சேர்ந்த திமுக நெல்லை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுப்ரமணியனை நயினாருக்கு எதிராக நிறுத்தலாமா என தீவிரமாக யோசித்து வருகிறது தலைமை.
இதேபோல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் இதர தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை இறுதி செய்து பரிந்துரைக்க மண்டலப் பொறுப்பாளரான கனிமொழிக்கு அசைன்மென்ட் வழங்கப்பட்டது. தனது பரிந்துரைகள் சரியானதாக இருக்க வேண்டும் என்பதற்காக கனிமொழியும் தன் பங்கிற்கு வேட்பாளர் தேர்வு தொடர்பாக தனிப்பட்ட முறையில் சர்வேக்களை நடத்தி முடித்திருக்கிறார். அதன் அடிப்படையில் ஒரு தொகுதிக்கு 3 பேர் கொண்ட பட்டியலை அவரும் தலைமைக்கு பரிந்துரைத்திருப்பதாகத் தெரிகிறது” என்றனர்.