மானாமதுரை: எங்களுக்காக திமுக கவலைப்பட வேண்டாம் என கனிமொழிக்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் தலைமையில் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தில் வெளிப்படையான விவாதம் நடைபெற்றது. முதல்வர், அமைச்சர்கள் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்தனர். இந்த விவகாரத்தை சாதாரணமான ஒன்றாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்தால் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். மக்கள்தொகைக்கு பதிலாக அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீத தொகுதிகளை அதிகரிக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், அதுவும் தமிழகத்துக்கு சாதகமாக இருக்காது.
மேலும், 800-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் இருந்தால் நாடாளுமன்ற செயல்பாடும் பாதிக்கப்படும். தற்போதே நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை.
உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மட்டும் ஜனநாயகம் வலுப்பெறாது. நாடாளுமன்றத்தை பயனுள்ள விவாதங்கள் நடைபெறும் அமைப்பாக இல்லாமல், அதிகமான உறுப்பினர்கள் வந்து கைதட்டி கலைந்து செல்லும் இடமாக மாறிவிடக்கூடாது.
அமெரிக்காவில் மக்கள்தொகை அதிகரித்த போதிலும், பிரதிநிதிகள் சபையின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இந்திரா காந்தியும், வாஜ்பாயும் தென் மாநிலங்களின் நலனை கருத்தில் கொண்டு 543 என்ற எண்ணிக்கையை பாதுகாத்தனர். தமிழக உரிமைக்கு எதிரான எந்த பார்முலாவையும் ஏற்க முடியாது. தொகுதி மறுவரையறையை யாராவது ஆதரித்தால் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்ததாகவே கருத முடியும்.
மறுவரையறையில் தொகுதிகளின் எல்லைகளை மாற்றுவர். அரசியல் ரீதியாக தங்களுக்கு சாதகமான பகுதிகளை ஒன்றிணைத்து ஒரு தொகுதியாகவும், வாக்களிக்காத பகுதிகளை பல தொகுதிகளாக சிதறடித்து மாற்றும் ‘ஜெரிமாண்டரிங்’ நடைபெற வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அரசியல் ரீதியாக சாதகமான தேர்தல் முடிவுகளை உருவாக்க முயற்சி செய்யலாம்.
காவிரி நீரை எவ்வாறு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நடைமுறைகள் ஏற்கனவே உள்ளன. காவிரி மேலாண்மை அமைப்பு வழங்கியுள்ள உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும். யாருக்காவது அதில் உடன்பாடு இல்லையெனில் உச்சநீதிமன்றத்தை நாடலாம்.
மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. மேகேதாட்டு அணை இன்னும் கட்டி முடிக்கவில்லை. அதில் இன்னும் தண்ணீர் தேக்கப்படவும் இல்லை. அது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை அல்ல; தொடர்ந்து கவனிக்க வேண்டிய பிரச்சினை. அதேசமயத்தில் காவிரி நீர் தொடர்பான உடனடி பிரச்சினைகளை உரிய முறையில் கையாள வேண்டும்.
நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் இருந்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை நாடுவதற்கும் நமக்கு உரிமை உள்ளது. சட்டப்பேரவை விவகாரங்களை நான் கவனிப்பதில்லை. மக்களின் பொதுப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
உதயநிதி பேசியதும், அவரை கைது செய்ததும் தேவையில்லாதது. தமிழகத்தில் பாஜகவை யாரும் கவனிப்பதில்லை. சீமான் தேர்தலுக்குப் பிறகு காரைக்குடிக்கு திரும்ப வரவே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் காவிரி பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால் காங்கிரஸ் வருத்தப்படும் என்பதற்காகவே தொகுதி மறுவரையறை கூட்டத்தை முதல்வர் நடத்தியுள்ளார் என்று கனிமொழி கூறியது குறித்த கேள்விக்கு, “நாங்கள் வருத்தப்படுவது குறித்து திமுக கவலைப்பட தேவையில்லை. நாங்கள் கவலைப்படுவது எல்லாம் தமிழக பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என்பது தான்” என்று கார்த்தி சிதம்பரம் பதிலளித்தார்.