சென்னை: திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கமாகும். அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள் மற்றும் திமுக தொடங்கிய நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பாண்டு திமுக முப்பெரும் விழா சென்னை அறிவாலயத்தில் செப்டம்பர் 15-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. இதில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கட்சியில் சிறப்பாக செயலாற்றிய மூத்த முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், நேற்று நடைபெற இருந்த ‘முப்பெரும் விழா’ ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக சென்னை அறிவாலயத்தில் செப்டம்பர் 15-ம் தேதி மாலை நடைபெறவிருந்த ‘முப்பெரும் விழா’ ஒத்திவைக்கப்படுகிறது. விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.