தமிழச்சி தங்கபாண்டியன்
சென்னை: “திராவிட மாடல் அரசின் மதுரை - கோவை மெட்ரோ திட்டங்களை புறக்கணித்துவிட்டு, நாங்கள் அறிவித்த வேட்பாளரை நீங்கள் தேர்வு செய்தால்தான், நாங்கள் இதை செய்வோம் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சொல்வது அப்பட்டமான பிளாக்மெயிலுக்கு ஈடாகும்” என திமுக எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மதுரை - கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக திராவிட மாடல் அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. மே 7, 2021 அன்று, உடனடியாக மதுரை மெட்ரோ திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, கொள்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டார். பிப்ரவரி 20, 2023 அன்று சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மார்ச் 27, 2023 அன்று விரிவான திட்ட அறிக்கைக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
பிப்ரவரி 19, 2024 அன்று மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை (DPR) அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது. இதன் மூலம் மாநில அளவிலான பணிகள் 100% நிறைவு பெற்றுள்ளன. செப்டம்பர் 6, 2025 அன்று திருமங்கலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சுரங்கம் தோண்டும் பணிகளில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன. இந்த அனைத்து பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்து முடித்துக் காட்டியுள்ளார்.
திராவிட மாடல் அரசின் மதுரை - கோவை மெட்ரோ திட்டங்களை புறக்கணித்துவிட்டு, நாங்கள் அறிவித்த வேட்பாளரை நீங்கள் தேர்வு செய்தால்தான், நாங்கள் இதை செய்வோம் என சொல்வது அப்பட்டமான பிளாக்மெயிலுக்கு ஈடாகும். குறிப்பாக மக்கள் தொகையை காரணமாக காட்டி, மெட்ரோ திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்காமல் இருந்தது. தமிழர் நலனுக்கு மொத்தமாக தூரோகம் செய்யும் செயல். நாங்கள் செய்த வேலைகளை மறைத்துள்ளீர்கள். இதனால் தான் இத்தேர்தலை டெல்லி மற்றும் தமிழ்நாட்டுக்கான தேர்தல் என சொல்கிறோம்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 20 லட்சம் அளவை எட்டவில்லை என்றுக் கூறி கோவை மற்றும் மதுரை மெட்ரோவுக்கு பாஜக அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால் மக்கள் தொகை குறைவான ஆக்ரா மற்றும் பாட்னாவுக்கு மெட்ரோ ரயில் அனுமதி வழங்கி இரட்டை நிலைபாட்டை பின்பற்றுகிறது ஒன்றிய பாஜக அரசு.
பாட்னாவிஸ் துணை முதல்வராக இருந்த காலத்தில், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வரவேண்டிய பல முதலீடுகளை குஜராத்துக்கு மாற்றி விட்டனர். அவர், மதுரையில் மெட்ரோ திட்டத்தை கொண்டு வருவேன் எனக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.