மிசா, சர்க்காரியா கமிஷன் தொடர்பாகச் சட்டப்பேரவையில் முதல்வர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் மறுத்ததைத் தொடர்ந்து, அவருடைய இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள்.

 
தமிழகம்

அமளியில் ஈடுபட்டதால் திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றம் - பேரவையில் நடந்தது என்ன?

முதல்வர் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க பேரவைத் தலைவர் மறுப்பு

செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் விஜய் பேசியதை, அவைக் குறிப்பில் இருந்து நீக்க மறுத்ததால், திமுக எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று அவை கூடியதும், எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு பேசியதாவது: சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் விஜய் பேசும்போது, அமலாக்கத் துறை வழக்கின் விவரங்கள் முழுவதையும் அவையிலேயே படித்தார்.

இது அவை மரபை மீறிய செயல். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் 60 ஆண்டு பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். அவர் மிசா கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். வெளியில் இருக்கும் நபர் குறித்து பேரவையில் பேசக் கூடாது. ஏனென்றால் அவர்கள் பதில் அளிக்க வாய்ப்பில்லை.

மேலும், சர்க்காரியா கமிஷன் குறித்தும் இங்கு முதல்வர் பேசினார். முரசொலி மாறன் தமிழகத்துக்குப் புகழ் சேர்த்தவர். அவர் குறித்தும் முதல்வர் பேசி இருக்கிறார். சர்க்காரியா கமிஷனில் 28 குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன. அவை நிரூபிக்கப்படவில்லை. அதனால் வழக்கு தொடர முடியாது என்றுதான் சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் ஏதோ தவறு நடந்தது போல, அதில் மாறனைத் தொடர்புப்படுத்தி முதல்வர் பேசினார். அதனால் இந்தப் பேச்சுக்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம்:

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்: அமலாக்கத் துறை விசாரணை குறித்து முதல்வர் விஜய் எதுவும் பேசவில்லை. அதில் உள்ள ஆதாரங்களைக் குறிப்பிட்டுதான் பேசினார். சர்க்காரியா கமிஷன் குறித்து இந்த அவைக் குறிப்பில் ஏற்கெனவே இருப்பதைத்தான் முதல்வர் பேசினார். சர்க்காரியா கமிஷனில் 6 குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறது எனக் கூறி சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

திருட்டு, வழிப்பறி, பெண்கள் குறித்த குற்ற வழக்கு என எதில் கைது செய்யப்பட்டாலும், எல்லோரையும் மிசாவில் கைது செய்ததாகக் கருத முடியாது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 20 அம்ச திட்டத்தை அறிவித்த போது, 21 அம்ச திட்டம் என அவதூறாகப் பல விஷயங்களைப் பேசிய போதுதான் கைது செய்யப்பட்டார். பெண்கள் குறித்த அவதூறான வழக்கில் கைது செய்யப்பட்டார் என்று உள்ளதே தவிர, மிசாவில் கைது செய்யப்பட்டதாக எந்த குறிப்பிலும் இல்லை.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: திமுக ஆட்சியில் ஐந்தாண்டுகளாகச் செய்த ஊழல்களை, முதல்வர் விஜய் ஒவ்வொரு துறையாகச் சுத்தம் செய்து வருகிறார். ஊழல் என்ற மிகப்பெரிய புற்றுநோயைத் திமுகதான் வளர்த்தது என்ற வரலாற்றுப் பதிவைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். திமுக செய்த ஊழல் கலாச்சாரத்தை எங்கள் முதல்வர் தமிழக வரலாற்றில் முதன்முறையாகத் துடைத்தெறிவார்.

பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர்: முதல்வர் விஜய் சில ஆதாரங்களை முன்கூட்டியே என்னிடம் காட்டினார். சர்க்காரியா கமிஷன் பற்றி இந்த அவையில் எப்படி எல்லாம் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன என்பது குறித்து இந்த அவைக் குறிப்பில் உள்ளன. இந்த மாமன்றத்தில் பலமுறை விவாதிக்கப்பட்ட செய்திதான் சர்க்காரியா கமிஷன். ஏற்கெனவே சொல்லப்பட்ட செய்தியைத்தான் படித்தார்.

மிசாவிலே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து முதல்வர் குறிப்பிடுகிறார். கைது செய்யப்பட்ட செய்தி உண்மையானதுதான். அதை இந்த அவையில் தெரிவித்திருக்கிறார். நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது அமலாக்கத் துறை கொடுத்த ஆதாரங்களை வெளியிட, நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்கலாம்.

அமலாக்கத் துறை என்ன கொடுத்தது என்று பொதுவெளியில் உள்ள தகவலைத்தான் முதல்வர் கூறியிருக்கிறார். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோ, அது தவறு என்றோ அவர் சொல்லவில்லை. எனவே, முதல்வர் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அப்போது, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில், ‘‘திமுக உறுப்பினர்கள் இந்த அவையின் நடவடிக்கைகளுக்குத் தொந்தரவு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அப்போது, முதல்வரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி பேரவைத் தலைவர் இருக்கையைச் சூழ்ந்து கொண்டு திமுக எம்எல்ஏக்கள் கோஷமிட்டனர். பேரவைத் தலைவர் முன்பாக தரையில் அமர்ந்தும் அமளியில் ஈடுபட்டனர்.

முதல்வரின் பேச்சுக்கு அமைச்சர்கள் அளித்த பதில் குறித்து பேச எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலுக்கு வாய்ப்பளித்தும், தொடர் அமளியில் ஈடுபட்டதால், ‘‘இந்த அவையை நடத்த விடாமல் தடை செய்யும் நோக்கத்தோடு வந்திருக்கிறீர்கள். அதனால் உங்களை அவையில் இருந்துவெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவிடுகிறேன்’’ என்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அவைக் காலவர்கள், திமுக உறுப்பினர்களைக் கூண்டோடு வெளியேற்றினர்.

SCROLL FOR NEXT