முதல்வர் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை, அவரது வீட்டில் போலீஸார் நேற்று கைது செய்து அழைத்துச் சென்றனர்.

 
தமிழகம்

முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது - நடந்தது என்ன?

15 நாள் நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்

செய்திப்பிரிவு

கோவில்பட்டி/ தூத்துக்குடி: ​முதல்​வர் விஜய் குறித்து ஒருமை​யிலும், மிரட்​டும் வகை​யிலும் பொதுக் கூட்​டத்​தில் பேசி​யது தொடர்​பாக விளாத்​தி​குளம் திமுகஎம்​எல்ஏ மார்க்கண்​டேயனை போலீ​ஸார் கைது செய்​தனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, தூத்துக்குடி நீதிபதி உத்தரவின்பேரில், 15 நாள் நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

தூத்​துக்​குடி மாவட்​டம் கோவில்​பட்​டி​யில் கடந்த 18-ம் தேதி இரவு திமுக பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பார​தி, வடக்கு மாவட்​டச் செய​லா​ளர் கீதாஜீவன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்ட இந்த கூட்டத்தில், விளாத்​தி​குளம் திமுக எம்​எல்ஏ ஜீ.​வி.​மார்க்கண்​டேயன் பேசி​ய​தாவது:

முன்​னாள் முதல்​வர்​கள் காம​ராஜர், அண்​ணா, ஜெயலலிதா ஆகியோர் தேர்​தலில் தோற்​ற​போது, அப்போது இருந்த தலை​வர்​கள் நாகரி​க​மாக பேசினர். ஆனால், சட்​டப்​பேர​வை​யில் பேசிய முதல்​வர் விஜய், ‘தேடிக் கொண்​டிருக்​கிறேன் உங்கள் தந்தையை’ என்கிறார்.

கைது செய்து விடு​வார்​கள் என பயந்து, இரவோடு இரவாக கரூரில் இருந்து கேர​வனில் யாரை வைத்​துக்​கொண்டு ஓடினீர்​கள்? எங்​கள் தலை​வர்​களை அவமரி​யாதை செய்தால் அடித்து விரட்​டத் தயா​ராக இருக்​கிறோம். எந்த இடத்​தில், என்ன பேசி​னாலும் அடிப்​போம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

‘‘உங்​களை சட்​டப்​பேர​வைக்​குள் வைத்​துப் பார்த்​துக் கொள்​கிறோம். சட்​டமன்​றத்​தைப் பூட்​டு​வா​ராம். பூட்டியவருக்கு எலும்பு இருக்​காது. உடைத்​து​விட்​டுத்​தான் அனுப்​புவோம்’’ என்று ஆவேச​மாக​வும், முதல்​வரை ஒருமை​யில் குறிப்​பிட்​டும் பேசி​யது சர்ச்​சையை ஏற்படுத்தி​யது. இதுதொடர்​பாக தூத்​துக்​குடி மாவட்ட குற்றப்​பிரி​வில் தவெக​வினர் புகார் கொடுத்​தனர். இதையடுத்​து, விளாத்​தி​குளம் டிஎஸ்பி சுந்​தர​பாண்​டியன், மாவட்ட குற்​றப்​பிரிவு டிஎஸ்பி கண்​ணன் மற்​றும் போலீஸார் விளாத்​தி​குளம் அம்​பாள் நகரில் உள்ள மார்க்கண்​டேயன் எம்​எல்ஏ வீட்​டுக்கு நேற்று காலை சென்றனர்.

நடைப​யிற்சி முடித்​து​ வீட்​டுக்கு வந்​திருந்த அவரிடம், கைது செய்யவந்​துள்ள தகவலை போலீஸார் தெரிவித்தனர். வீட்​டுக்​குள் சென்று தயா​ராகி வெளியே வந்த அவரை போலீ​ஸார் கைது செய்​தனர். அவர் மீது 351(3), 352, 353(3) - கொலை மிரட்டல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுவது, இரு அமைப்பினர் இடையேமோதலை ஏற்படுத்தும் வகையில் பேசுவது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்​கிடையே, தகவல் அறிந்து திமுக​வினர் திரண்​டனர். அரசை கண்​டித்து கோஷமிட்​ட​வாறு, காவல் துறை வாகனங்​களை மறித்து சாலை​யில் அமர்ந்​தனர். இதனால், ஒரு மணி நேரம் பரபரப்​பான நிலை காணப்​பட்​டது. பின்னர், அவர்​களை அப்​புறப்​படுத்​திய போலீ​ஸார், தூத்துக்​குடி எஸ்​.பி. அலு​வலக வளாகத்​தில் உள்ள மாவட்ட குற்​றப்​பிரிவு அலு​வல​கத்​துக்கு மார்க்​கண்​டேயனை அழைத்​துச் சென்​றனர்.

அங்​கும் திமுக​வினர் திரண்​ட​னர். முன்​னாள் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோர் சென்​னை​யில் இருந்து அவசர​மாக தூத்​துக்​குடி திரும்பி நேராகஎஸ்​.பி. அலு​வல​கத்​துக்​குச் சென்​றனர். எம்​எல்​ஏக்​கள் கோவில்​பட்டி கருணாநி​தி, பாளை​யங்​கோட்டை அப்​துல்​ வ​காப், தூத்​துக்​குடி மேயர் ஜெகன் பெரிய​சாமி மற்​றும் நூற்​றுக்​கணக்​கான திமுகவினர் அங்கு குவிந்​தனர். ‘எம்​எல்​ஏ​வின் உடல்​நிலை குறித்து அறிய வேண்​டும்.

எஸ்​.பி.யை சந்​திக்க வேண்​டும்’ என கூறினர். போலீ​ஸார் அனு​ம​திக்​காத​தால், தரை​யில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், கடும் வாக்​கு​வாதம், தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.

திமுகவினர் 152 பேர் கைது: அனிதா ராதாகிருஷ்ணன் மயக்​கம் வரு​வ​தாக கூறி, அங்​கிருந்து வெளி​யேறி​னார். கீதாஜீவன், கருணாநிதி எம்​எல்ஏ மற்​றும் திமுக​வினர் தூத்துக்​குடி - திருநெல்​வேலி தேசிய நெடுஞ்​சாலையில் மறியலில் ஈடு​பட்​டனர். இதையடுத்​து, 152 பேர் கைது செய்யப்​பட்​டனர்.

இதற்​கிடையே, மார்க்​கண்​டேயனிடம் இரவு வரை விசாரணை நீடித்​தது. சுமார் 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு, ஏடிஎஸ்பி தீபு தலைமையிலான போலீஸார் அவரை மருத்துவப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர், தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சுமதி முன்பு அவரை ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்பேரில், 15 நாள் நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ அடைக்கப்பட்டார்.

ஸ்டா​லின் கண்​டனம்: மார்க்​கண்​டேயன் எம்எல்ஏ கைது செய்​யப்​பட்​டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலை​வர் மு.க ஸ்டா​லின் வெளி​யிட்​டுள்ள எக்​ஸ்​ தளப் பதி​வில் கூறியிருப்​ப​தாவது: தவெக ஆட்சி ஜனநாயகப் பண்​பு​கள் அறவே இன்​றிச் செயல்​படுகிறது. ஆட்​சி​யில் நடை​பெறும் தவறுகள், அவலங்​களை சுட்​டிக்​காட்​டும் திமுக முன்​னாள் அமைச்​சர்​கள், சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள், இணைய ஆதர​வாளர்​கள் என அனை​வரை​யும் தொடர்ந்து வேட்டையாடி வரு​கிறது ‘டேக் டைவர்​ஷன் மாடல்’ தவெக அரசு.

தமிழகத்​தில் நடை​பெறு​வது சட்​டத்​தின் ஆட்​சி​யா, சாத்தானின் ஆட்​சி​யா? சட்​டப்​படி​யும் மனசாட்​சிப்​படி​யும் செயல்​படுங்​கள். இல்​லா​விட்​டால், பின்​விளைவு​கள் ஏற்படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார். மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது செய்யப்பட்டதற்கு திமுக துணைப் பொதுச் செய​லா​ளர் கனி​மொழி எம்.பி.யும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT