தாக்குதலுக்குள்ளான திமுக நிர்வாகி ரங்கநாதன்.

 
தமிழகம்

விருத்தாசலத்தில் திமுக நிர்வாகி மீது நாதகவினர் தாக்குதல் - நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

விருத்தாசலம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க கோரிக்கை விளக்க மாநாடு விருத் தாசலம் புறவழிச்சாலையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டார்.

அப்போது சாலையோரத்தில் நின்றிருந்த திமுக மாவட்ட வர்த்தகர் அணி பொருளாளர் ரங்கநாதன் என்பவர் சீமானை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையறிந்த சீமான் அவரை தாக்க முற்பட்டார்.

இதைக்கண்ட நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களும் கூடி திமுக நிர்வாகியை கடுமையாக தாக்கினர். பின்னர் சீமான் அங்கிருந்து சென்றுவிட்டார். அப்போது அங்கிருந்த போலீஸார் ரங்கநாதனை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து சீமானை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி திமுக நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி விருத்தாசலம் புறவழிச் சாலையில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் புறவழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கி ணைப்பாளர் ராஜதுரை கூறுகையில், “இதுதொடர்பாக விருத் தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். திமுக நிர்வாகியை சீமான் தாக்கவில்லை.

போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்துள்ளனர்” என்றார். திமுக நிர்வாகியை சீமான் தாக்கியதாக வரும் தகவல் குறித்து காவல் ஆய்வாளர் பிரதாப்பிடம் கேட்டபோது, “உறுதியாக எதுவும் கூற முடியாது.

ஒரு தரப்பினர் மட்டுமே புகார் அளித்துள்ளனர். விசாரணைக்குப் பின்னர் தெரிவிக்கிறேன்” என்றார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திமுக பிரமுகர்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர்.

SCROLL FOR NEXT