நாகப்பட்டினம்: கடந்த முறை மத்திய மண்டலத்தில் 41 தொகுதிகளில் 37 தொகுதிகளை வென்றெடுத்த திமுகவை, இந்த தேர்தலில் 12 தொகுதிகளை வென்றெடுத்து இங்கேயும் நாங்கதான் கெத்து என்று பலம் காட்டியிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.
மத்திய மண்டலத்தில் மொத்தம் உள்ள 41 தொகுதிகளில் 2021 தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும்(வேதாரண்யம், நன்னிலம், ஒரத்தநாடு, விராலிமலை) வெற்றி பெற்றது.
ஆனால் இந்த தேர்தலில் திமுக தனியாக 15 இடங்களிலும் கூட்டணி கட்சிகள் 6 இடங்களிலும் என மொத்தம் 21 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றாலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட கூடுதல் தொகுதிகளில் வென்று பலம் காட்டியுள்ளது.
அதேசமயம், திமுகவின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில்தான் இந்த தேர்தல் முடிவுகள் உள்ளன. மத்திய மண்டலத்தில் இந்த தேர்தலில் திமுக கூட்டணி தன்னிடமிருந்து 16 இடங்களை இழந்துள்ளது என்று காட்டுகிறது தேர்தல் முடிவு. திமுக இழந்த 16 இடங்களில் 12 இடங்களை தவெகவும், 4 இடங்களை அதிமுகவும் பெற்றுள்ளன என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற அதிமுக இந்த தேர்தலில் தனியாக கரூர், லால்குடி, நன்னிலம், வேதாரண்யம், விராலிமலை, அரியலூர் என 6 இடங்களிலும், கூட்டணியில் மன்னார்குடி, ஜெயங்கொண்டம் என 2 இடங்களிலும் என மொத்தம் 8 இடங்களில் வெற்றி பெற்று, தன்னையும் தன் கூட்டணிக் கட்சிகளையும் நிலை நிறுத்தியுள்ளது.
ஆனால், திமுகவால் தனது இடங்களையும், கூட்டணிக் கட்சிகளின் இடங்களையும் காப்பாற்ற முடியாமல் போய் உள்ளது. இந்த 2 கட்சிகளையும் தாண்டி தவெக எவ்வித கூட்டணியும் இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி, தஞ்சாவூர், கும்பகோணம், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், முசிறி, துறையூர், பெரம்பலூர் என 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் டெல்டாவில் பலம் காட்டிய திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளுக்கும் புதிய கட்சியான தவெக 12 தொகுதிகளை வென்று பயம் காட்டியுள்ளது என்றே சொல்லலாம்.
இதன் மூலம் அடுத்தடுத்த தேர்தல்களில் எங்கள் ஆட்டம் தான் வெல்லும் என்று மத்திய மண்டலத்துக்கு அழுத்தம் திருத்தமாக தவெக சொல்லியிருக்கிறது. மத்திய மண்டலத்தில் மெல்ல மெல்ல திமுக பலம் இழக்கிறது என்பதை தவெக மற்றும் அதிமுகவின் வெற்றிகள் உணர்த்தியுள்ளன.
தவெகவால் அசைக்க முடியாத 4 மாவட்டங்கள்
மத்திய மண்டலத்தில் கரூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தனது வெற்றியை பதிவு செய்த தவெக, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியவில்லை.
திருச்சி மாவட்டத்தை வாரிச்சுருட்டிய தவெக
திருச்சி உள்ளிட்ட மத்திய மண்டலத்தில் மொத்தம் உள்ள 41 தொகுதிகளில் 12 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. இதில், திருச்சி மாவட்டத்தில் மட்டும், மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் திருச்சி கிழக்கு, மணப்பாறை, ஸ்ரீரங்கம். திருவெறும்பூர், முசிறி, துறையூர் என 6 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.