சென்னை: “சட்டப்பேரவையில் சோர்வு, தயக்கம், மயக்கம், இயலாமை என இருந்த முதல்வர் விஜய், திருச்சியில் எள்ளலும் துள்ளலுமாக பேசுகிறார். இதை எழுதிக் கொடுத்தது யார்?” என திமுக பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடத்தில் கூறும்போது, “தான் வகிக்கும் முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவராக இல்லாமல், தன் தகுதியைக் குறைத்துக்கொண்டு வீர வசனம் பேசிக்கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய்.
சட்டப்பேரவையில் சோர்வு, தயக்கம், மயக்கம், இயலாமை என இருந்த முதல்வர் விஜய், திருச்சியில் எள்ளலும் துள்ளலுமாக பேசுகிறார். கர்ஜிப்பதாக நினைத்து, கத்திப் பேசியுள்ளார். ஏன் இந்த வீர வசனம்? இதை எழுதிக் கொடுத்தது யார்?
இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் பின்னால் இருக்கும் அரசியல் தந்திரம், அசிங்கம், புலம்பல் எல்லாம் தெரியும். ஒவ்வொரு வரிக்கும் திமுகவை குறை சொல்வது; திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என சொல்வது; மற்றவர்கள் எல்லாம் அல்லு, சில்லு என பேசியுள்ளார்.
அதிமுக மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்களை அல்லு, சில்லு என சொல்லிவிட்டு, அதிமுகவின் ஒரு அணியினரை சந்தித்து சால்வை போட்டு ஆதரவு கேட்டது தில்லு முல்லா, அரசியல் அநாகரிகமா? தமிழக மக்கள் அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த எதற்கு அவகாசம்? காவல் துறை உங்கள் கையில் தானே உள்ளது?
திருவள்ளுவர் உடை பற்றி எப்போது பேசுவீர்கள்? என்ன ஆனது ப்ரோ? கச்சத்தீவு விவகாரம், பக்ரீத் தீர்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் தவெக அரசு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஸ்டாலின் இருக்கும் வரை தான் மேகேதாட்டு எங்களுக்கு பிரச்சினையாக இருந்தது, விஜய் ஒரு ஆளே இல்லை என்கிறார் டி.கே.சிவகுமார். மேகேதாட்டு விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன? டி.கே.சிவகுமாரின் கருத்துக்கு ஏன் எதிர்வினையாற்றவில்லை? விவசாயிகள் இன்று பிணம் போன்று நடித்து போராட்டம் செய்கிறார்கள்.
எங்களை ஆறு மாதம் கேள்வி கேட்காதீர்கள் என சொன்னீர்களே, தேர்தல் அறிக்கையில், உங்கள் நடத்தையில் நாணயம் உள்ளதா? ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் இல்லாமல் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது. நீங்கள் 2026-ல் தானே தேர்தல் அறிக்கை தயாரித்தீர்கள்; இது கூட தெரியாமலா தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளீர்கள்.
நீங்கள் சாதி, மதம் பார்த்து வேட்பாளர்களை நிறுத்தவில்லையா? மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை. பி எம்.ஸ்ரீ உள்ளிட்ட திட்டங்களை நாங்கள் நிறுத்தி வைத்திருக்கிறோம். நாங்கள் தூர சக்தி, ஓர சக்தி, தூர்ந்து போன சக்தியா?
இடபிள்யூஎஸ் இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியவர்தான் ஸ்டாலின் சார். அரசிலமைப்பு சட்டத்தை மீறினால் ஆட்சியையே கலைக்கலாம். நாங்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அதை மீறியிருக்கிறோம். ஆனால், நீங்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்காக கெஞ்சுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன? இதை நாங்கள் அம்பலப்படுத்தக் கூடாதா?
பிரதமர் மோடியை 10 நிமிடம்தான் முதல்வர் விஜய் சந்தித்தார். விஜய் ப்ரோ, பிரதமர் முன்னால் என்ன ஆனது உங்கள் சக்தி, ஏன் பேசாமல் வந்தீர்கள். பத்திரிகையாளர்களை ஏன் பார்க்கவில்லை? திருச்சி கிழக்கு எனது செல்லப்பிள்ளை என சொல்கிறார் விஜய். மக்களே ஜாக்கிரதையாக இருங்கள். முதல்வரின் முன்னால் எவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறது.
இப்போதும் முன்வெட்டு நடந்தால், அதற்கும் காரணம் ஸ்டாலின் என்கிறீர்கள். விஜய் ப்ரோ பயமாக இருக்கிறது. தூக்கமும் வரவில்லை. எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என தெரியவில்லை. தொலைதூர திட்டமும் இல்லை.
திமுக உங்கள் நியாமான எல்லா செயல்களுக்கு துணை நிற்க தயாராக இருக்கிறது. ஆனால், இப்படி எல்லாம் முதிர்ச்சி, பக்குவம் இல்லாத, எதைப் பற்றியும் சிந்திக்காத ஒரு தான்தோன்றித்தனமாக அரசாங்கத்தை தந்து கொண்டிருக்கின்றார் முதல்வர். முன் அனுபவம் இல்லாதது தப்பு கிடையாது. உங்களுக்கு ஓட்டு போட்டது வெறும் 35 சதவீதம் தான். 65 சதவித மக்கள் உங்களை வேண்டாம் என வாக்களித்துள்ளனர்.
பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் ஏன் வருகிறீர்கள்? அவர்கள் சமூகத்தின் நான்காவது தூண். நானே தவறு செய்தாலும் அதை வெளிக்கொண்டு வருவார்கள்.
தவெகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள், இன்றும் தெரியாத அமைச்சர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும். முதல்வர் இப்படி பேசலாமா? சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத் துறைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தவெக அமைச்சரவையில் இருக்கிறார்கள்” என்றார்.
பின்னர், திமுக - அதிமுக கூட்டணி தொடர்பான கேள்விக்கு, “கட்சியின் இரண்டாம் மூன்றாம் கட்டத் தலைவர்கள் பேசியிருக்கலாம். ஜனநாயகத்தில் பேசக் கூடாது என எதுவுமில்லை.
எங்கள் கட்சியின் தலைவர் திடமான முடிவு என்ன? அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்ன? நாங்கள் செயற்குழு, பொதுக்குழு கூட்டினோமா?” என்று ஆ.ராசா கூறினார்.
விசிகவை கடுமையாக விமர்சனம் செய்தது தொடர்பாக கேட்டதற்கு, “விசிக மீது அதிக பாசம் வைத்திருந்தோம். பாசம் இருப்பவர்கள் மீதுதான் கோபம் வரும். காங்கிரஸ் மீது அதிக பாசம் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியே இருந்தனர். இது ஒரு சகோதர முரண்பாடுதான். இது நிரந்தரமான ஒன்று இல்லை” என்று அவர் கூறினார்.