எழிலன்
சென்னை: “முதல்வர் விஜய் இன்று வெளியிட்டவை கவர்ச்சிக்கான அறிவிப்புகள் ஆகும். இவை விளம்பரத்துக்காகவும், செய்திகளில் இடம் பெறுவதற்காகவும் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களை எல்லாம் எவ்வாறு செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாக விளக்க வேண்டும்” என திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மருத்துவக் காப்பீட்டு நிதி ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காப்பீட்டு அட்டைகளுக்கான நிதி ஒதுக்கீட்டின் விவரம் தெளிவாக இல்லை.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை கருணாநிதிதான் முதலில் தொடங்கி வைத்தார். 2021-2026 திமுக ஆட்சிக் காலத்தில் மட்டும் 25 லட்சம் மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
பட்ஜெட்டில் காப்பீடுக்கு ரூ.1,400 கோடிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தும்போது காப்பீடு நிறுவனத்திற்கு நாம் கொடுக்க வேண்டிய தொகை ரூ.4,000 கோடியாக உயர இருக்கிறது. கஜானா காலி எனக் கூறிவிட்டு அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என அறிவிக்கின்றனர். தேர்தல் வேட்புமனுவில் யார் எல்லாம் கார் வைத்துள்ளனர்; அவர்களின் பொருளாதார நிலை பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
எனவே, அதை ஆராய்ந்து கார் இல்லாத எம்எல்ஏக்களுக்கு மட்டும் கார் வழங்க வேண்டும். நமது சட்டப்பேரவையில் உள்ள 234 எம் எல் ஏக்களில் 190 எம்எல்ஏக்கள் கோடிகளில் சொத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஏழை, எளிய சாமானியர்களை சட்ட மன்றத்துக்குள் கொண்டு வந்திருப்பதாக சொல்லும் முதல்வர் விஜய், யார் கார் வைத்துள்ளனர், கார் இல்லை என வேறுபடுத்தி பார்த்து கார் வழங்கினால் உகந்ததாக இருக்கும்.
முதல்வர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்புகள் கவர்ச்சிக்கான அறிவிப்புகள் ஆகும். இவை விளம்பரத்துக்காகவும், செய்திகளில் இடம் பெறுவதற்காகவும் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களை எல்லாம் எவ்வாறு செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாக விளக்க வேண்டும்.
500 யூனிட்டுகளுக்குள்தான் 200 யூனிட் இலவச மின்சாரம் பொருந்தும் என்று தவெக அரசு சொல்கிறது. 501 யூனிட்டுக்கு மேல் சென்றால், ஒரு யூனிட்டுக்கு ரூ.4 என்று கணக்கிடப்படுவதால்தான் தற்போது மின்கட்டணம் அதிகரித்துள்ளது. இப்படித் திட்டங்களைக் கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு, மக்களிடம் பணத்தைச் சுரண்டுகிறார்கள். 110 விதியின் கீழ் வெற்று அறிவிப்புகளை அறிவிப்பது சட்டமன்றத்துக்கு தலைகுனிவு” என்று அவர் தெரிவித்துள்ளார்.