பெ.சண்முகம் | கோப்புப்படம் 
தமிழகம்

பரந்தூர் விவகாரம்: திமுகவுக்கு பெ.சண்முகம் சரமாரி கேள்வி

வெற்றி மயிலோன்

சென்னை: ‘பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மச்சேந்திர நாதன் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சியில் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எங்களைப் போன்றவர்கள் பலமுறை வற்புறுத்தியதற்கு பிறகும் ‌பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மச்சேந்திர நாதன் ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சிக் காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்?

இந்த விவகாரத்தில் திமுக வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. அந்த அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை வெளியிடத் தயாரா?’ எனத் தெரிவித்துள்ளார்.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும் என்று நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு கட்சிகள் வரவேற்பு தெரிவித்த நிலையில் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், “பரந்தூர் பன்னாட்டு விமான நிலைய திட்டத்தைக் கைவிடுவதாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியை பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக்கூடாது. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-ன் கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.

மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில், உலகத் தரத்திலான ஒரு விமானநிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்.

தமிழகத்தின் வளர்ச்சியே மொத்தமாக வீழ்ச்சி ஆகிவிடும். முதல்வரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்.. தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி போன்ற இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் தவெக அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுகளைத் தகர்க்கும் பேரிடி’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT