நயினார் நாகேந்திரன் 
தமிழகம்

“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தேர்தலுக்காக திமுக பிரித்தாளும் சூழ்ச்சி” - நயினார் நாகேந்திரன்

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக தேர்தல் வாக்கு வங்கிக்காக பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறது, இந்துக்கள் - இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக இருப்பதை திமுக அரசு விரும்பவில்லை.” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக சார்பில் நடைபெறும் பிரச்சாரப் பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வரவேற்பு எங்கள் கூட்டணியின் வெற்றிக்கான அறிகுறி . கள்ளக்குறிச்சி பகுதியில் ஒரு கிராமத்தில் சுற்றுப்பயணம் சென்றபோது, அங்கு மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. ஆரம்ப சுகாதார நிலைய வசதி கூட இல்லை.

வீடுகளில் தீபம் ஏற்றுவது போலவே கார்த்திகை நாளன்று கோயில்களிலும் தீபம் ஏற்றப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்றுவதில் யாருக்கு என்ன பிரச்சினை இருக்கிறது.

முதலில் அந்த மலைக்கு பிரச்சினை செய்தார்கள். இங்கிலாந்து வரை சென்று குன்றம் குமரனுக்கு என தீர்ப்பு வந்தது. முதல்வரின் காவல்துறை எந்த வேலையும் செய்யவில்லை. கோயில்களுக்கு எதிரான வேலை என்றால் முதல் ஆளாக வந்து விடுகிறார்கள். நேற்று திருப்பரங்குன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அறநிலையத்துறை சார்பில் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல் முறையீடு செய்துள்ளார்கள். பிரச்சினையை உருவாக்க வேண்டும். கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த விவகாரத்தில் திமுக அரசு செயல்படுகிறது.

வாக்கு வங்கியை குறிவைத்து இது போன்ற நடவடிக்கையை திமுக அரசு மேற்கொள்கிறது. திமுக அரசு ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றினால் கலவரம் வரும் என்று பேசுகிறார்.

அதற்கான வாய்ப்பே இல்லை. தீபம் ஏற்றுவதற்கு இஸ்லாமியர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு 2 மதத்தினரும் ஒன்றாகவே இருக்கின்றனர். முதல்வரின் பிரித்தாளும் சூழ்ச்சியினாலேயே தற்போது இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதானத்தை வேரறுப்போம் என்று கூறியுள்ளார். திமுக தேர்தல் வாக்கு வங்கிக்காக பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறது, இந்துக்கள் இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக இருப்பதை அரசு விரும்பவில்லை. அதனை முருகன் பார்த்துக் கொள்வார். இன்று 3 மணி வரை நேரம் இருக்கிறது. நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

பரணி தீபத்தை மலை மீது ஏற்றுவோம். இந்த தீர்ப்புக்கு அறநிலையத்துறை தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திமுக அரசு தோல்வி பயத்தில் நடுநடுங்கி போய் உள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு அவசியமே இல்லை. அவ்வாறு பிறப்பித்தாலும் 3 பேர் வரை செல்வதற்கு அனுமதி உள்ளது.

ஓபிஎஸ் டெல்லிக்கு சென்று வந்தது தெரியும். ஆனால் எதற்காக சென்று வந்தார் என்பது எனக்குத் தெரியாது. திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும். அதனை வரவேற்கும் கட்சிகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நமது கொடி பறக்கும். இனி யாருடனும் ரகசிய சந்திப்புகள் என்பது கிடையாது. நேரடி சந்திப்பு தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தில் திமுக அமைச்சர்கள் சேர்வார்கள் என்று ஆதவ் அர்ஜுனா கூறுகிறார் அதே போல் பாஜகவிற்கும் வருவார்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “பொறுத்திருந்து பாருங்கள்” என்று நயினார் கூறிச்சென்றார்.

SCROLL FOR NEXT