சென்னை: ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என, மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை நகலெடுத்து அறிவித்து, அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றி விட்டது’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என 2021-ல் தேர்தல் வாக்குறுதியாக அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த நான்கரை ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை. அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்களை சமாளிப்பதற்காக, ஆட்சி முடியப்போகும் நேரத்தில் ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ என்ற ஒரு ஏமாற்று மாடல் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது.
மத்திய அரசை குறைகூறும் திமுக அரசு, மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பெயரை மாற்றி, தற்போது தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்று அறிவித்து அரசு ஊழியர்களை முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றியுள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஏதுமில்லை. ஓய்வுபெறும்போது கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம், விலைவாசிப் புள்ளி உயர்வின் அடிப்படையில் அகவிலைப் படியும் கிடைக்கும். ஊதியக்குழு பரிந்துரையின்படி ஓய்வூதிய அடிப்படைத் தொகையும் மாற்றியமைக்கப்படும்.
ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களிடமிருந்து மாதம்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் அப்பட்டமான நகல் ஆகும். மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்த அம்சமான ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதியம் அவ்வப்போது உயர்த்தி மறுநிர்ணயம் செய்யப்படும் என்ற பரிந்துரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இல்லை.
உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதையும், அதற்கு சங்க நிர்வாகிகள் துணை போயுள்ளனர் என்பதையும் புரிந்து கொள்வார்கள். வரும் தேர்தலில் திமுகவை தோற்கடித்து தக்க பரிசைத் தருவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.