தேர்தல் வரும் பின்னே ‘கவனிப்புகள்’ வரும் முன்னே என்பது மக்களுக்கு மட்டுமல்ல... ஆளும் கட்சியினருக்கும் தான் போலிருக்கிறது. இந்த ஆண்டு தேர்தல் ‘பொங்கல்’ என்பதால் ஆளும் கட்சி தரப்பில் இருந்து கழகத்தினரை உற்சாகமாக வைத்துக் கொள்வதற்காக கரன்சிகளை தாராளமாக இறக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு கட்சியினருக்கு தேவையானதைச் செய்து கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது முக்கிய கட்சிகளில் வழக்கமான ஒன்று தான். அதிலும், அதிமுக-வில் இந்த ‘கவனிப்புகள்’ கணிசமாக இருக்கும் என்பார்கள். அதேசமயம், ஆளும் கட்சியாக இருந்தால் மட்டுமே திமுக கஜானா திறக்கும் என்பார்கள். அப்படியே கொடுத்தாலும் அதற்கான வரவு செலவுகளை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மந்திரிகளே பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், இம்முறை கட்சி தலைமையிலிருந்தே மாவட்ட நிர்வாகிகளுக்கு பொங்கல் போனஸாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரைக்கும் அவரவரின் பொறுப்புக்கு தகுந்தவாறு தொகை வந்து சேர்ந்துள்ளது. இதனால், கிளைக் கழகத்திலிருந்து மாவட்டக் கழகம் வரை அத்தனை நிர்வாகிகளும் இப்போதே பொங்கல் கொண்டாடிய திருப்தியில் இருக்கிறார்கள். சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சத்தை பொங்கல் போனஸாக வழங்கி இருக்கிறதாம் தலைமை. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அனைத்து மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர்களுக்கும் தலா ரூ. 5 லட்சத்தை தனது பங்காக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அனுப்பி வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு அடுத்தடுத்து அசைன்மென்ட்களை கொடுத்துக் கொண்டே வருகிறது திமுக தலைமை. அண்மையில் தான் எஸ்ஐஆர் பணிகளையும் நடத்தி முடித்தார்கள். இவர்களை வைத்து ஆகவேண்டிய காரியங்கள் இன்னும் நிறையவே இருப்பதால் மற்றவர்களை நம்பாமல் தலைமையே களத்தில் இறங்கி பொங்கல் போன்ஸ்களை வழங்கி இருக்கிறது.