செங்கோட்டையன்
கோவை: சென்னைக்கு 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில், மின் கட்டமைப்பு பணிகளை கடந்த திமுக ஆட்சியில் செய்யவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் அவர் கூறியதாவது: மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழையும் நீர்வரத்தும் குறைவாக இருக்கிறது. தண்ணீர் கூடுதலாக இருந்தால் மட்டுமே திறக்க முடியும் பிரதமருடன் முதல்வர் விஜய் பேசும்போது, நமக்குத் தேவையான நீரை மாதம்தோறும் வழங்க வலியுறுத்தி இருக்கிறார்.
அதிமுக ஆட்சியிலும் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. சென்னையில் ஐந்தாண்டு காலத்தில் ஏழாயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு, மின்சாரத்தை மக்களுக்கு பயன்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள், அதற்கான கட்டுமான பணிகள் செய்திருக்க வேண்டும். அதை செய்யாமல் மொத்தமாக கடந்த ஐந்தாண்டு காலத்தில் ரூ.627 கோடி மட்டுமே செலவு செய்துள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை 3,500 மெகாவாட் மட்டுமே கொள்திறன் இருக்கிறது. ஆனால், 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மக்கள் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். புதிதாக மக்களுக்கு தேவையான மின்கட்டமைப்பு பணிகளை கடந்த ஆட்சியில் செய்யவில்லை. மேகதாட்டு அணை கட்டக்கூடாது என்பதில் முதல்வர் தெளிவாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.