எழிலரசன்
காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் உள்ளார். பாரம்பரியமான திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் அவர் பேசியதில் இருந்து...
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் சர்ச்சை ஏன்? தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியானதா?
ஏற்கெனவே என்ன நடைமுறைகள் உள்ளதோ, எதைச் செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராதோ அதைதான் ஒரு மாநில அரசு அனுமதிக்கும். புதிதாக ஒரு பழக்கத்தை கொண்டுவந்து, அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் எந்தச் செயல்களையும் அனுமதிக்க முடியாது. அந்த வகையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் சரியானது.
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தகுதியற்ற, இறந்துபோன வாக்காளர்கள் மட்டுமே தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், இதில் ஆரம்பம் முதலே தேவையற்ற பதற்றத்தை திமுக உருவாக்கி வருவதாக கூறப்படுகிறதே?
நீங்கள் ‘பதற்றம்’ என்பதைவிட, ‘விழிப்புணர்வு’ என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். திமுகவைப் பொறுத்தவரை பிஎல்ஏ-2 முகவர்கள் மூலம் களத்தில் இறங்கி முழுமையாக பணிகளைச் செய்துள்ளோம். பிற கட்சிகள் ஏதோ பெயரளவில் செயல்பட்டன. ஆனால், திமுகவினர் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்தனர். அதன்பலனாகவே எஸ்ஐஆர் பணிகள் சரியாக நடைபெற்று வருகின்றன. ஆவணங்கள் இல்லாத எளிய மக்களிடம் அதிகாரிகள் கடுமை காட்டும்போது, அவர்களின் வாக்குரிமை பறிபோகும் அபாயமுள்ளது. இதைதான் நாங்கள் சுட்டிக்காட்டினோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இன்னும் குற்றச் சம்பவங்கள் பெரிய அளவில் குறையவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார்களே?
தமிழகத்தில் ஆதாயத்துக்காக நடைபெறும் கொலைகள் குறைவுதான். முன்விரோதம் மற்றும் தனிபட்ட காரணங்களால்தான் அதிக குற்றங்கள் நடைபெறுகின்றன. இதை தடுப்பது சவாலானதுதான். எனினும் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வன்னியர் சமூகத்துக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதில் திமுகவின் நிலைப்பாடு என்ன? திமுக தொடர்ந்து ஏமாற்றி வருவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டுகிறாரே?
கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தலுக்காக கடைசி நேரத்தில் அவசர, அவசரமாக 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், முறையான தரவுகள் இல்லாமல் அமல் செய்யப்பட்டதால் நீதிமன்றம் அதை ரத்து செய்தது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனால் முறையான தரவுகளை சேகரித்து, சட்டரீதியாக சிக்கல் வராதபடி இடஒதுக்கீட்டை கொண்டுவர முயற்சித்து வருகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க முடியும். இதை தெரிந்தே பாமக அரசியல் செய்கிறது. திமுக சமூகநீதி அடிப்படையில் அனைவருக்கும் உரிய இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யும்.
தவெக தலைவர் புதுச்சேரி மாநாட்டில் பேசும்போது, திமுகவை நம்பாதீர்கள்; அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள் என்று விமர்சனம் செய்துள்ளாரே?
திமுகவை நம்பி வாக்களித்த மக்களுக்கு, எல்லா திட்டங்களையும் செய்துதரும் ஆட்சியாக உள்ளது. தமிழக மக்கள் எங்கும் ஏமாறவில்லை, யாரிடமும் ஏமாறவில்லை. மாறாக தமிழக மக்கள் ஒரு நாடக கூட்டத்திடம் ஏமாந்துவிடக்கூடாது. குறிப்பாக இளைய சமூகம், புரிதல் இல்லாமல் ஏமாந்துவிடக்கூடாதுனு தான் நாங்கள் அச்சப்படுகிறோம்.
திமுகவின் நான்கரை ஆண்டு சாதனைகள் என்னென்ன? மக்கள் மீண்டும் ஏன் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்?
திராவிட மாடல் என்பது வெறும் முழக்கம் அல்ல. அது உள்ளடக்கிய வளர்ச்சி. மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணம், காலை உணவுத் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் உள்ள 2.1 கோடி குடும்ப அட்டைதாரர்களில், சுமார் 1.85 கோடி குடும்பங்களுக்கு நேரடியாக சென்று சேர்ந்துள்ளது.
மத்திய அரசு பல்வேறு இடையூறுகளை செய்த போதும் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறோம். மேலும், மதம், சாதி உட்பட பாஜக எத்தனையோ சூழ்ச்சிகளை செய்தாலும், சாதி மதத்தை காட்டி குழப்ப நினைத்தாலும், மக்கள் திமுக பக்கமே நிற்பார்கள். 2026-ல் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.