தமிழகம்

மதுரை வாக்காளர்களுக்கு டிபன் கேரியர், ஹாட் பாக்ஸ், சேலை விநியோகம் - திமுகவினர் ‘கவனிப்பு’ தீவிரம்!

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே மதுரை மாவட்டத்தில் திமுகவினர் வாக்காளர்களுக்கு வீடு வீடாக டிபன் கேரியர், ஹாட் பாக்ஸ், சேலை வழங்கி வருகிறார்கள். மேலும், மகளிர் அணியினர் வீடு, வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளை பரப்புரை செய்து வீட்டின் கதவில் ஒட்டி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் திமுக அமைப்பு ரீதியாக, மாநகரம், புறநகர் தெற்கு மற்றும் புறநகர் வடக்கு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. மாநகர் மாவட்டத்தில் மதுரை மத்தி, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று தொகுதிகள், புறநகர் தெற்கு மாவட்டம், திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகள், புறநகர் வடக்கு மாவட்டத்தில் மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மேலூர் மற்றும் சொழவந்தான் ஆகிய தொகுதிகளும் உள்ளன.

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோக இந்த முறை திமுக 7 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. திமுகவினர், 10-க்கு 10 தொகுதிகளையும் கைப்பற்ற திட்டமிட்டு, தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள்.

          

ஆனால், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் சரியில்லாததால் குறிப்பிட்ட சில தொகுதிகளை தவிர, மற்ற தொகுதிகளில் திமுகவுக்கு பெரியளவில் சாதகமாக இல்லை என்ற தகவல்கள் வந்துள்ளன. ஒரு சில தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளில் தவெக, நாம் தமிழர் பிரிக்கும் வாக்குகளை பொறுத்து திமுக மற்றும் அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மதுரை மாநகர், புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு ஆகிய திமுக மாவட்டங்கள் சார்பில் வாக்காளர்களை குளிர்விக்கும் விதமாக ஹாட் பாக்ஸ், டிபன் கேரியர், சேலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை, ஒவ்வொரு பகுதியிலும் நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் வழங்கி வருகிறார்கள். இதில் மதுரை கிழக்கு, வடக்கு தொகுதியில் திமுக மகளிர் அணியினர், ஒவ்வொரு பூத்துக்கும் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பரப்புரையில் களம் இறங்கி உள்ளனர்.

திமுக மகளிர் அணி நிர்வாகிகள் தலைமையில் பூத்துக்கு 10 பேர் கொண்ட குழுவை அமைத்து அவர்கள் தினமும் மாலை நேரங்களில் 3 மணி நேரம் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வாக்காளர்களிடம் திமுக அரசின் கடந்த 10 ஆண்டுகால சாதனைகளை பட்டியலிட்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து திமுகவுக்கு வாக்களிக்கும் படி கேட்டு கொள்கின்றனர்.

இந்த பரப்புரை, ஒவ்வொரு வீட்டிலும் முடிந்ததை உறுதி செய்ய அந்த வீட்டின் கதவில், உரிமையாளர் அனுமதியுடன் ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற ஸ்டிக்கரை ஓட்டி வருகிறார்கள். இந்த பரப்புரையை பகுதி மற்றும் கிளை செயலாளர்கள் உறுதி செய்வர். இப்படி, ஒவ்வொரு பூத்திலும், திமுக ஆதரவு, நடுநிலை, எதிர்க்கட்சி வாக்காளர்களை அடையாளம் கண்டு பட்டியலிட்டு தேர்தல்நேர கவனிப்புகளை மேற்கொள்ள ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு பூத்திலும் திமுகவுக்கு விழும் வாக்குகளை தற்போதே அக்கட்சியினர் உறுதி செய்து வருவதால் தற்போதுள்ள அதிருப்தி குறைந்து வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என அக்கட்சியினர் நம்புகிறார்கள்.

இது குறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், “வெல்லும் தமிழ் பெண்கள் தேர்தல் பரப்புரை குழுவில் இடம் பெறும் மகளிர் அணி நிர்வாகிகள் தவிர, உடன் செல்லும் மற்ற பெண்களுக்கு தினமும் ரூ.200 வழங்கப்படுகிறது.

இந்த தேர்தல் பரப்புரை மகளிர் குழுவினர், வீடுகளை தாண்டி, பூ கடைகள், பூ கட்டும் இடங்கள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட், மெடிக்கல் ஸ்டோர்கள், ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்கள் போன்று பெண்கள் பணிபுரியும் இடங்களுக்கும் சென்று, பணிகளை இவர்களும் பார்த்துக் கொண்டே திமுக அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்கின்றனர்.

இந்த பரப்புரை, மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தேர்தல் பிரச்சார மகளிர் குழுவை, பிரச்சாரத்துக்கு மட்டுமின்றி தேர்தல் நாளில், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வாக்காளர்களை வாக்குச் சாவடிகளுக்கு அழைத்து வரும் பணிகளிலும் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர்.

SCROLL FOR NEXT