தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருவதால் கட்சியின் தேசிய தலைமையிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு முறையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுக-வுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், தொகுதிகளைக் குறைத்துக் கொள்ளுமாறு திமுக தலைமை கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து நான்கு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளைப் பெற்றுக்கொள்ள சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்தச் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் அதே 5 தொகுதிகளுக்கு உடன்படுமாறு திமுக வலியுறுத்தியது. ஆனால், கடந்த முறை போட்டியிட்ட 6 தொகுதிகளுக்கு மேல் கூடுதலாக தொகுதிகளை வழங்கவேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக நின்றது.
இதையடுத்து 6 தொகுதிகளை பெற்றுக்கொள்ளுமாறு திமுக கூறியது. ஆனால், அதற்கும் இறங்காத மார்க்சிஸ்ட் கட்சி, 7 தொகுதிகளை வழங்குமாறு வலியுறுத்தி வருகிறது. இதனால் இதுவரை நடைபெற்ற மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு இது குறித்து கட்சியின் தேசிய தலைமையிடம் முறையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக-வின் பிடிவாதமான போக்கால் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை குறித்து தேசிய தலைமைக்கு விளக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள நிலையில் அதற்குள்ளாக தொகுதி பங்கீட்டில் உரிய தீர்வு எட்டப்பட வேண்டும். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், மாநிலக் குழு கூட்டத்தில் விவாதித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.