தமிழகம்

நழுவுகிறதா கை... உதறுகிறதா உதய சூரியன்? - ஆளும் கூட்டணியை அசைக்கும் அதிரடி நகர்வுகள்

பேச்சுவார்த்தைக்கு வர இன்று கெடு

வே.கோபாலகிருஷ்ணன்

கே.சி. வேணுகோபால் நடத்திய அவசர ஆலோசனை, ‘25 தொகுதிகளை ஏற்க முடியாது’ என்ற கிரிஷ் சோடங்கரின் பகிரங்கப் பேட்டி, பேச்சுவார்த்தைக்கு வர காங்கிரசுக்கு திமுக இன்று கெடு எனத் தமிழக அரசியல் களம் தற்போது திமுக - காங்கிரஸ் கூட்டணியைச் சுற்றி உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றிபெற்றது. இந்த முறை கூடுதல் தொகுதிகளோடு, ஆட்சி அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர் போர்க்கொடி தூக்கியதால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.

          

சோனியா காந்தியின் தலையீட்டிற்குப் பிறகே இந்தப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது. இருப்பினும், அறிவாலயத்தில் நடந்த சமீபத்திய பேச்சுவார்த்தையில், "காங்கிரஸிற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க முடியாது" என திமுக கறாராகத் தெரிவித்துவிட்டது. இந்தத் தகவல் ராகுல் காந்தியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

இந்தச் சூழலில்தான், முதல்வர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்திலும், அதற்கு ஸ்டாலின் அளித்த நன்றியிலும் ‘சகோதரர்' என்கிற வார்த்தை இடம்பெறாதது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இது கூட்டணி உடையப்போவதற்கான அறிகுறியா என்ற கேள்வி எழுந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், "திமுக 25 சீட் தருவதாகச் சொல்வது ஏற்புடையதல்ல" என வெடித்தார். இது நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலானது.

நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கே.சி. வேணுகோபால் மற்றும் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ-க்களுடன் காணொலி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார்கள். "திமுக 25 இடங்களைத்தான் தருகிறது, நாம் என்ன முடிவு எடுக்கலாம்?" எனக் கேட்டதற்கு, எம்.எல்.ஏ-க்கள் தரப்பில், "நாம் கூட்டணியை விட்டு வெளியேறினால், அது பாஜக தமிழகத்தில் காலூன்ற நாமே சிவப்புக் கம்பளம் விரிப்பது போலாகிவிடும். நடிகர் விஜய்க்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

சொந்தக் கட்சிக்கே பிரசாரத்திற்கு வராத அவர், புதுச்சேரி மற்றும் கேரளாவில் காங்கிரஸிற்காக வருவாரா என்பது சந்தேகமே. எனவே, தவெக-வுடன் கைகோர்ப்பது இப்போதைக்குச் சரியாக இருக்காது. முதல்வரிடம் பேசி கூடுதல் இடங்களைப் பெற முயற்சிப்பதே அரசியல் ரீதியாகச் சரியான முடிவாக இருக்கும். இருப்பினும், தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்றத் தயார்" எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று ராகுல் காந்தி ஹைதராபாத் வந்திருந்தார். இதையடுத்து, அவரை சந்திக்க தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சென்றதாக தகவல்கள் பரப்பப்பட்டன. இந்தத் தகவல்கள் அறிவாலயத்தை எட்டியதும், "மாநிலங்களவை சீட்டுக்கான வேட்பாளர் யார் என்பதை இன்றுக்குள் (3-ம் தேதி) சொல்லிவிடுங்கள்" என ஏற்கெனவே கிரிஷிடம் சொன்ன 'கெடு'வை திமுக தலைமை மீண்டும் நினைவூட்டியுள்ளது.

மேலும், இன்றைக்குள் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவித்துவிடுவோம் என்றும் காங்கிரஸ் தலைமைக்கு திமுக தெரிவித்து விட்டது.

இப்படியான சூழலில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டு விசேஷத்திற்காக கே.சி. வேணுகோபால் சென்னை வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குள் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "எங்கள் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. தேர்தல் நேரத்தில் அதிக தொகுதிகள் கேட்பது சகஜமே. திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கை ரீதியான இயற்கையான கூட்டணி. முதல்வர் ஸ்டாலின் எங்கள் கோரிக்கைகளை நிச்சயம் பரிசீலிப்பார்," எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT