தமிழகம்

கறார் ஸ்டாலின்... கணக்குப் போட்டு கேட்கும் காங்கிரஸ் - தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

செய்திப்பிரிவு

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முதல்வர் ஸ்டாலின் கறார் காட்டியதால் காங்கிரஸ் கிட்டத்தட்ட சரண்டராகிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

திமுக - காங்கிரஸ் உறவில் தொடர்ந்து சலசலப்புகள் எழுந்து வருகின்றன. “ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் வேண்டும்” என காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் தூக்கிய போர்க்கொடியால் திமுக உஷ்ணமாகியது. கூட்டணிக்குள் சலசலப்பு அதிகமானதும், “ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸின் அதிகாரபூர்வ நிலைப்பாடு அல்ல" என அக்கட்சியின் அமைப்புப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் விளக்கம் கொடுத்தார். அதன்பின் காங்கிரஸ் நிர்வாகிகள் அமைதியானாலும், திமுக-வின் கோபம் மட்டும் தணியவில்லை. அதன் விளைவாக காங்கிரஸை வழிக்குக் கொண்டுவர, கூட்டணிக்குள் தேமுதிக-வை இழுத்துப் போட்டது திமுக.

          

இதைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை திமுக 22-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக, காங்கிரஸ் தவிர்த்து மற்ற கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது திமுக. இந்த பரபரப்புக்கு இடையே 22-ம் தேதி சென்னை வந்த கே.சி.வேணுகோபால், முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் சுமுக உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுக, காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘‘ஆரம்பத்தில் இருந்தே 40 சீட்களில் போட்டியிட வேண்டும் என்பதே ராகுல் காந்தியின் விருப்பமாக இருந்தது. ஆனால், காங்கிரஸ் தலைவர்களின் எல்லை மீறிய விமர்சனங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், சிறுபான்மையினர் வாக்கு வங்கி, தேசிய அரசியல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சோனியா காந்தியிடம் முதல்வர் நேரடியாக பேசினார். அப்போது, ‘தேசிய அளவில் திமுக-வுக்கு காங்கிரஸும், மாநில அளவில் காங்கிரஸுக்கு திமுக-வும் தேவை. எனவே, உங்களுடன் பயணிக்கவே விரும்புகிறோம்’ என தெளிவுபடுத்தினார்.

இதையடுத்துதான் வேணுகோபால் அவசரமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பேச்சுவார்த்தையின் போது அவர், 39 தொகுதிகள், 2 மாநிலங்களவை இடங்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், ‘வரும் தேர்தல் முக்கியமானது. காங்கிரஸுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதேசமயம் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்துள்ளன. எனவே, ஏற்கெனவே உள்ள தோழமைக் கட்சிகளுக்கான தொகுதிகளை குறைக்க வேண்டியுள்ளது. எனினும் காங்கிரஸுக்கு கவுரவமான இடங்கள் ஒதுக்கப்படும்’ என கறாராகவே தெரிவித்ததாகத் தெரிகிறது.

அதற்கு வேணுகோபால், ‘உங்களின் பதிலை தலைமையிடம் சொல்கிறேன்’ எனச் சொல்ல, ‘அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள். நானும் சோனியா காந்தியிடம் பேசுகிறேன்’ என ஸ்டாலினும் சொன்னதாகத் தெரிகிறது. இறுதியாக வேணுகோபால் புறப்படும்போது, ‘மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் பேசுவது கூட்டணி தர்மத்துக்கு எதிராக இருக்கிறது. உங்கள் தலைவர்களை திமுக நிர்வாகிகள் விமர்சனம் செய்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?’ என ஸ்டாலின் கேட்டிருக்கிறார். அதற்கும், 'தலைமையிடம் பேசுகிறேன்' என்று சொல்லி இருக்கிறார் வேணுகோபால். பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்பட்டு விடும் என நம்பி வந்த வேணுகோபாலுக்கு, ஸ்டாலினின் கறார் பேச்சு பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது” என்றனர்.

வேணுகோபால் மூலமாக திமுக-வின் மனநிலையை புரிந்துகொண்ட காங்கிரஸ் தலைமை, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் பேசுவதற்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை அடுத்ததாக அனுப்பியது. சென்னையில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில், “முதல்வரை சமாதனம் செய்து கூட்டணி பேச்சுவார்த்தையை விரைந்து தொடங்க வேண்டும். மனஸ்தாபங்களை கடந்துசெல்ல வேண்டும்” என சோடங்கர் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு, “முதல்வரிடம் பேசி சமாதனம் செய்கிறேன்” என கனிமொழி உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நேற்று கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டியில், "இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. 22-ம் தேதி முதலமைச்சரை கே.சி.வேணுகோபால் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். எனினும் காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. மாநிலங்களவை, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. முதலில் தொகுதிகள் எண்ணிக்கையை இறுதி செய்யவேண்டும். அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இரண்டு தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவும் அமர்ந்து பேசுவார்கள்" என்றார்.

SCROLL FOR NEXT