சென்னை: மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில், வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலிருந்து திமுக, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
சென்னை மாவட்டத்தில், வரும் ஜன.1-ம் தேதி தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் திருத்தம் மற்றும் வாக்குச்சாவடிகளை சீரமைத்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
மாவட்டத் தேர்தல் அதிகாரி சமீரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக, வாக்குச்சாவடிகளைப் பிரித்தல், வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்தல், வாக்குச்சாவடி பெயர் மாற்றம் மற்றும் வாக்குச்சாவடிகளை ஒருங்கிணைத்தல் குறித்தும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை வாக்குச்சாவடி நிலை அலுவலருடன் அரசியல் கட்சிகள் இணைந்து பணியாற்ற ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் நிலை முகவர்களை நியமித்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள 4079 வாக்குச்சாவடிகளை, 4071 ஆக குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், எஸ்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என்றும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வெளிநடப்பு செய்தன.
திமுக வழக்கறிஞர் சந்துரு செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் அவசரகதியில் எஸ்ஐஆர் அமல்படுத்தப்பட்டது. திமுகவின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் சென்னையில் 14 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். சென்னையில் திமுக தோல்விக்கு எஸ்ஐஆர் தான் காரணம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை” என்றார்.