திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
தமிழகம்

துரோகம் புரிவது காங்கிரசுக்கு புதிதல்ல: திமுக இளைஞரணி கூட்டத்தில் கண்டன தீர்மானம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘தன் தேவைக்கேற்ப கொள்கை களை மறந்து துரோகம் புரிவது காங்கிரசுக்குப் புதிதில்லை’ என திமுக இளைஞர் அணி கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும், இளைஞர் அணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: நடந்து முடிந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்காளர்களுக்கும், தேர்தல் களத்தில் வழிநடத்தி 73 தொகுதிகளில் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற முதன்மை காரணமாக விளங்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி. ஓய்வில்லாமல் உழைத்த இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்படுகிறது.

ஜூன் 3-ல் கருணாநிதி பிறந்த நாள் விழாவை, இளைஞர் அணி சார்பில் மக்களுக்கு பயன்படும் வகையில் எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். தேர்தல் களத்தில் திமுகவெற்றிவாய்ப்பை இழந்ததற்கான காரணத்தைக் கண்டறிந்து மேற்கொள்ளவிருக்கும் அனைத்து மறுசீரமைப்புக்கும் இளைஞர் அணி துணைநிற்கும்.

திமுகவால் காங்கிரஸ் வெற்றி: கடந்த பல தேர்தல்களிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டு பல சட்டப் பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது காங்கிரஸ். அவர்கள் வெற்றிபெறக் காரணம் திமுகவினர்தான் என்பதை யாருமே மறுக்க முடியாது. நடந்து முடிந்ததேர்தலிலும் திமுகவினரின் உழைப்பினால் 5 சட்டப்பேரவை உறுப்பினர்களை வென்றனர். தேசியக் கட்சியாக இருந்து கொண்டு தேர்தலுக்கு முன்பாகவே மாநிலக் கட்சியான திமுக உறுப்பினர்களின் வாக்குகளால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றனர்.

இத்தனையும் பெற்றுக் கொண்டு, நன்றி உணர்ச்சியே இல்லாமல் ஒரே இரவில் அணிமாறிச் சென்றுள்ளனர். பழம்பெரும் பேரியக்கம், அரசியலின் அடிப்படை நாகரிகத்தைக் கூடகடைபிடிக்கவில்லை. அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரசுக்குப் புதிதில்லைதான். இன்று நமக்குச் செய்த துரோகத்தை, நாளை பதவி கொடுத்த புதிய கூட்டாளிக்கும் செய்வார்கள். பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடுபவர்கள்தான் காங்கிரஸ் கட்சியினர். சொந்த உழைப்பில் ஒருநாளும் வெற்றி பெற முடியாமல், நம்பியவர்களுக்கெல்லாம் துரோகமிழைக்கும் அறமில்லாத காங்கிரஸ் கட்சிக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 13 நாட்களிலேயே 30-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து இன்று தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தறிகெட்ட செய்திகள் வருகின்றன. ஆனால், ரீல்ஸ்களால் இவற்றைத் திசை திருப்ப பார்க்கிறார்கள். இந்த வெற்று விளம்பர நடவடிக்கைகளுக்குப் பதிலாக பத்திரிகையாளர்களை முதல்வர் சந்தித்து, மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். ரீல் ஆட்சியை நிறுத்தி, ரியல் நிர்வாகத்தை வழங்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT