சென்னை: மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தை மீட்டெடுக்க, 389 இடங்களில் ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தை (MGNREGA) மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர்.
இது தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும். ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைக்கும் விதமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறவும், மத்திய பாஜக அரசின் சதிச் செயலையும், அதற்கு ஒத்துழைத்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் அதிமுகவையும் கண்டித்தும்’ தமிழகம் முழுவதும் இன்று திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
இந்தப் போராட்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுபவர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டங்களில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தின்போது தமிழக மக்களை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசையும், அதற்கு துணைப் போகும் அதிமுகவை கண்டிப்பதாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.