தமிழகம்

திமுக வேட்பாளர்கள் ‘டிக்’கில் கறார்... கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டில் ‘சேஃப் கேம்’... - ஒரு விரைவுப் பார்வை

வீரமணி சுந்தரசோழன்

திமுக ஒரேயடியாக தனது வேட்பாளர் பட்டியலையும், கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் விவரங்களையும் அறிவித்துள்ளது. திமுக வேட்பாளர் பட்டியலில் 3 அமைச்சர்களுக்கு சீட் கிடைக்கவில்லை; பல சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

கொஞ்சம் தாமதமானாலும், அதிரடியாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது திமுக. வேட்பாளர் அறிவிப்பின் தாமதம் குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்துள்ளோம்” என்றார்.

திமுகவின் வேட்பாளர் பட்டியல் கிட்டத்திட்ட கட்சியினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. முக்கிய அமைச்சர்கள் அனைவருமே தங்கள் தொகுதிகளில் மீண்டும் களமிறங்கியுள்ளனர், அமைச்சர்களில் பெரும்பாலானோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ், காந்தி ஆகிய 3 பேருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. இதில், அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்திக்கு ராணிப்பேட்டையில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

          

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும் இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதே நேரத்தில், அவரின் மகன் கௌதம சிகாமணி திருக்கோவிலூர் தொகுதியில் களமிறங்குகிறார்.

திமுகவில் இம்முறை 18 பெண்களுக்கு வாய்ப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 60 புதுமுகங்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக கட்சியில் உதயநிதி ஸ்டாலினின் கை ஓங்குகிறது என்ற பேச்சும் வலுவாக அடிபட ஆரம்பித்துவிட்டது. சிட்டிங் எம்எல்ஏக்கள் பலருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

திமுக இம்முறை தனது வேட்பாளர் பட்டியல் மற்றும் தொகுதிகள் பட்டியலில் மூன்று விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. அதில் தவெகவுக்கு சாதகமாக இருக்கும் என சொல்லப்படும் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் வேளச்சேரியை மட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 15 தொகுதிகளில் உதயசூரியனே களமிறங்குகிறது. தவெகவை சமாளிக்க கூட்டணிக் கட்சிகளை நம்பமுடியாது என்பதால், தானே களமிறங்கி மோதிப் பார்க்க திமுக தயாராகிவிட்டதையே இது குறிக்கிறது.

அதுபோல சென்னையில், தற்போது உள்ள 6 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. தற்போதுள்ள சூழலுக்கு ஏற்றவாறு தவெகவின் போட்டியை சமாளிக்கும் வகையில் சென்னையில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அண்ணா நகர் எம்எல்ஏ மோகனுக்கு பதிலாக அவரின் மகன் கார்த்திக்கும், மறைந்த ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு தி.நகரின் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் தமிழன் பிரசன்னா திமுக சார்பில் போட்டியிடுகிறார். விஜய் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் பெரம்பூர் தொகுதியில், மூன்றாவது முறையாக திமுகவின் ஆர்.டி.சேகர் களமிறங்குகிறார். திமுகவின் மூத்த தலைவராக இருந்த பேராசிரியர் அன்பழகனின் பேரன் வெற்றியழகனுக்கும் இம்முறை வில்லிவாக்கத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் ஆதிக்கத்தை முடிவுகட்ட, செந்தில் பாலாஜி கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றி சுழன்று பணியாற்றி வருகிறார். இந்தச் சூழலில், கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். கரூர், அரவக்குறிச்சியில் தொடர்ந்து வென்று வந்த செந்தில் பாலாஜி நேரடியாக கோவையில் களம் காண்பதால், அதிமுகவுக்கும், கொங்கு மண்டலத்தின் அதிமுக முகமான வேலுமணிக்கும் நெருக்கடி கொடுக்க முடியும் என திமுக கணக்குப் போடுகிறது.

தென் மண்டலத்தில் அதிமுக – பாஜக கூட்டணியின் போட்டியை சமாளிக்க பல புது முகங்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது.

தொகுதிகள் ஒதுக்கீடு - ஓர் பார்வை:

பல்வேறு கணக்குகளை போட்டே கூட்டணிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக. கடந்த காலங்களில் திமுக தொடர்ந்து வெற்றிபெற்ற பல தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது திமுக. அதேபோல, அதிமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் பல தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளின் பக்கமும் தள்ளிவிட்டிருக்கிறது.

காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில், அதிமுகவுடன் நேரடியாக 18 தொகுதிகளில் அக்கட்சி மோதுகிறது. இது உண்மையாகவே காங்கிரஸுக்கும் பெரும் சவாலாக இருக்கும். காங்கிரஸ் கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் பெரும்பாலானவற்றை மீண்டும் பெற்றுள்ளது. சில தொகுதிகளை மட்டுமே மாற்றியுள்ளது.

தேமுதிக, விசிக, இடதுசாரிகளுக்கும் 50-50 அளவில் விருப்பப்பட்ட தொகுதிகள் வழங்கப்பட்டதாகவே தெரிகிறது.

விசிகவுக்கு வழக்கமாக வட மாவட்ட தொகுதிகளே ஒதுக்கப்படும். ஆனால், இம்முறை தென் மாவட்டத்தை சேர்ந்த பெரியகுளம் (தனி) தொகுதியில் முதன்முறையாக விசிக களம் காண்கிறது.

இடதுசாரிகளுக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில், 5 தனித் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு உதய சூரியன் போட்டியிடும் 3 பொதுத் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிட சீர்காழி (தனி) தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

ஒருவழியாக தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து வெளியிட்டு தேர்தலுக்கு தயாராகிவிட்டது திமுக. இனி தேர்தல் களம் இன்னும் தகிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

SCROLL FOR NEXT