இஸ்லாமிய சமூக பிரமுகர்களிடம் வாக்கு சேகரித்த சோழிங்க நல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.அரவிந்த் ரமேஷ்.
தமிழகத்தில் அதிக வாக்காளர் களைக் கொண்ட பெரிய தொகுதி என்ற தனிச்சிறப்பு வாய்ந்தது சோழிங்கநல்லூர் தொகுதி.
சென்னையை ஒட்டி ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள சோழிங்கநல் லூரில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலம், பொறியியல் கல்லூரிகள், உலகளாவிய திறன் மையங்கள் என பலதரப்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
ஐடி நிறுவனங்களின் அதிகரிப்பால் குடியிருப்புகளும் அடுக்குமாடி குடியிருப்புகளும் பெருகி வருகின்றன. இத்தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான அரவிந்த் ரமேஷ், மீண்டும் களம் காண்கிறார்.
இல்லத்தரசி களுக்கு ரூ.8 ஆயிரம் பரிசு கூப்பன், மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக அதிகரிப்பு என திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுடன் கடந்த ஐந்தாண்டுகளில் தான் செய்துள்ள வளர்ச்சி பணிகளையும், தொகுதியில் செய்யப்பட்டுள்ள சாலை, குடிநீர், மழைநீர் வடிகால், பாதாளச் சாக்கடை வசதி உள்ளிட்ட பணிகளையும் சொல்லி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து வருகிறார்.
இதுகுறித்து அரவிந்த் ரமேஷ் கூறியதாவது:
முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு
ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதியில் ரூ.66.6 கோடி மதிப்பீட்டில் சோழிங்கநல்லூர் புறநகர் அரசு மருத்துவமனை கொண்டுவந்துள் ளதை எனது முக்கியமான பணியாக கருதுகிறேன்.
பெரும்பாக்கம், ஒட்டியம்பாக்கம் செம்மஞ்சேரி பகுதிகளில் ரூ.165.32 கோடி செலவில் நீர்வளத்துறை சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மழைக்காலங்களில் இப்பகுதியில் தண்ணீர்தேங்கும் பிரச்சினையே எழாது.
பள்ளிக்கரணை அணை ஏரி பகுதியில் இருந்து சதுப்பு நில பகுதிக்கு கொண்டுசெல்ல ரூ.57.60 கோடி செலவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அதேபோல், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 14 மற்றும் 15 பகுதியில் ரூ.1,337.95 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகளும் ரூ.1,283 கோடியில் பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் வழங்கல் பணிகளும் முழூவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மேலும், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை - எம்ஆர்ஆர்-இசிஆர் இணைப்பு சாலையில் ஏறத்தாழ 2.5 கி.மீ. பெரு மூடு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி ரூ.70 கோடியிலும், சோழிங்கநல்லூர் கேகே நகர் சாலை - செம்மொழிச்சாலையில் 1.7 கி.மீட்டரில் பெருமூடு மழை கால்வாய் பணியும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் இருந்து சதுப்பு நில பகுதிக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு ரூ.44 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
உழைக்கும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளான கண்ணகி நகர், எழில்நகர் செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கத்தில் ரூ.569.32 கோடி மதிப்பீட்டில் பூங்கா, விளையாட்டு திடல், நூலகம், சமுதாய நலக்கூடம் மற்றும் குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்த வண்ணம் உள்ளன.
எனது தொகுதிக்கு உட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியத்தில் 7 ஊராட்சிகளில் சாலை, பூங்கா அமைக்கும் பணி ரூ.74.11 கோடி செலவில் நடந்து வருகிறது. செம்மொழி சாலை, பெருங்குடி, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன.
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது.
அதேபோல், செம்மஞ்சேரியில் 102 ஏக்கர் அரசு நிலங்கள் மீட்கப்பட்டு அந்த இடத்தில் ரூ.301 கோடி செலவில் நவீன விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- பி.ஜேம்ஸ்குமார்