அண்ணா அறிவாலயம்
சென்னை: டெல்லியில் வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி இண்டியா கூட்டணிக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் பங்கேற்கும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என திமுக அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்குப் பின், திமுகவுக்கு காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் விளக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் இண்டியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்துக்கு வருமாறு திமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட எஸ்ஐஆர், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு - ஒரே தேர்தல், வக்பு சட்டம், FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட - ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்திற்கும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாகத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றது.
அதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்திலும், ஆட்சியில் இருந்த நேரத்தில் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், உரிய நேரத்தில் நீதிமன்றங்களிலும் எடுத்து வைத்து வாதாடியும், போராடியும் வந்திருக்கிறது.
இண்டியா கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திமுக இயங்கியது. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார். இதை இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், அக்கட்சிகளின் தலைவர்களும் நன்கு அறிவார்கள்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கட்சியினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் இண்டியா கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்காத அதேநேரத்தில், இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில்,திமுக என்றைக்கும் குரல் கொடுக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், தேர்தலுக்குப் பின்னர் தவெகவுக்கு ஆதரவு அளித்தது. இது திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியது. அமைச்சரவையிலும் இப்போது இடம்பெற்றுள்ளது.
ஏற்கெனவே தேர்தலுக்கு முன்னரே திமுக - காங்கிரஸ் உறவில் விரிசல் என்று பேசப்பட்ட நிலையில், ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்து அதை உறுதியாக்கிச் சென்றார் ராகுல் காந்தி. அதேபோல் ஆட்சியில் பங்கு என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. குரல் எழுப்பி வந்தார். இன்னொருபுறம் தவெகவை, விஜய்யை ராகுலின் நண்பரான பிரவீன் சக்கரவர்த்தி புகழ்ந்து கொண்டே இருந்தார்.
இந்நிலையில், தேர்தல் தோல்விக்குப் பின்னர் எதிர்பார்த்தபடியே, தவெகவுக்கு முதன்முதலில் காங்கிரஸ் ஆதரவுக் கரம் நீட்டியது. கூட்டணியில் இருந்து அவசர கதியில் வெளியேறியதாக திமுக விமர்சித்ததோடு தங்களின் முதுகில் குத்துவிட்டதாகவும் வருத்தத்தைப் பதிவு செய்தது.
அப்போதே இனி தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் - திமுக உறவு என்னவாகும் என்று பேசப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் பங்கேற்கும் இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று திமுக அறிவித்துள்ளது.