சென்னை: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் அதிமுக - திமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக உறுப்பினர் தங்கமணி பேசும்போது, “100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் 125 நாட்கள் வேலை வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், அத்திட்டமே இல்லாமல் போய்விடும் என ஆளுநர் உரையில் உள்ளது” என்ற கருத்தை கூறி விவாதத்தை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “இந்த திட்டத்தை நிறுத்த மத்திய அரசு திட்டமிடுகிறது. முன்பு 100 சதவீதம் வழங்கிய நிதியை 60 சதவீதமாக குறைத்துள்ளது. திட்டத்தில் உள்ள காந்தி பெயரை மாற்றியுள்ளனர். மேலும், 125 நாட்கள் கொடுப்போம் என்பது ஏமாற்று வேலை. அந்த வேலை நாட்களையும் மத்திய அரசே நிர்ணயம் செய்யும் என்று கூறுகிறார்கள். கூட்டணியில் இருந்துகொண்டு இதற்கெல்லாம் நீங்கள் ஆதரவு அளிக்கிறீர்கள்” என்றார்.
அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பழனிசாமி, “100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. இதுவரை அதை நிறைவேற்றவில்லை. ஆனால் மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தியுள்ளது. அதைத்தான் நாங்கள் வரவேற்றுள்ளோம். பெயரை மாற்றக்கூடாது என நாங்களும் வலியுறுத்தினோம்” என்றார்.
அதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி, “திமுக ஆட்சிக் காலத்தில்தான் இத்திட்டமே தொடங்கப்பட்டது. இன்றைய பாஜக அரசு இந்த திட்டத்தை மாற்ற முயற்சிக்கிறது. காந்தி பெயரை மாற்றி ராம்ஜி என பெயர் வைத்தது ஏன்? ஜி, ராம்ஜிக்கு எல்லாம் இங்கு வேலை கிடையாது” என்று கூறினார்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சொல்வது உண்மை. ஆனால், அதை செய்ய வேண்டியது மத்திய அரசுதான். மத்தியில் எங்களின் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வரவில்லையே, பின்னர் எப்படி செய்ய முடியும்? உங்கள் கூட்டணியில் இருக்கும் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது. நீங்கள் குரல் கொடுக்கலாமே. மேலும், இத்திட்டம் தொடர்பாக பேரவையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட இருக்கிறது” என்றார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி, “நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நம்பித்தானே வாக்களித்தார்கள். நிறைவேற்ற வேண்டியது உங்கள் கடமை. எந்த அடிப்படையில இந்த வாக்குறுதியை கொடுத்தீர்கள். திமுகவுக்கு 39 எம்பி.க்கள் உள்ளனர். என்ன செய்தீர்கள்? ஏதாவது அழுத்தம் கொடுத்து ஒரு நாளாவது அவையை ஒத்திவைக்க முடிந்தததா? நாங்கள் காவிரி பிரச்சினைக்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க அழுத்தம் கொடுத்தோம்” என்று ஆவேசமாக கூறினார்.
அதன்பின் அமைச்சர் ரகுபதி, “அப்போது மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சிக்கப்பட்டது. அதலிருந்து மத்திய பாஜக அரசை காப்பாற்றுவதற்காகவே அதிமுகவினர் அவையை நடைபெற முடியாமல் முடக்கினர்” என்றார். அப்போது தங்கமணி, “பழனிசாமி முதல்வராக வந்த பின்பு இத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்” என்றார்.
ஓய்வூதியத் திட்டம் மீதான விவாதம்:
ஓய்வூதிய திட்டம் குறித்து அதிமுகவின் பி.தங்கமணி பேசும்போது, “நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், தமிழகமே போராட்டக் களமாக மாறி வருகிறது” என்றார். அதற்கு அமைச்சர் எ.வ.வேலு, “இந்த ஆட்சியில் 90 சதவீத பணிகளை நிறைவேற்றி உள்ளோம். சொல்லாததையும் முதல்வர் செய்துள்ளார். ஆனால், பாராட்ட உங்களுக்கு மனம் இல்லை” என்றார்.
தங்கமணி, “அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கு அரசு தீர்வு காண வேண்டும்” என்றார். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, “திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள். லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. மாறாக, மத்திய அரசு அறிவித்ததில் சில மாற்றங்கள் செய்து அறிவித்துள்ளீர்கள்” என்றார்.
அதற்கு முதல்வர் ஸ்டாலின், “23 ஆண்டுகால பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளோம். அரசு ஊழியர் சங்கத்தினர் கோட்டைக்கு வந்து எனக்கு இனிப்பு ஊட்டினர். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அது உங்களுக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் எதுவும் செய்யவில்லை என்கிறீர்கள். நீங்கள் எதுவும் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்” என்றார்.
அதற்கு பதிலளித்த பழனிசாமி, “உங்களுக்கு சாதகமான சங்கத்தினர்தான் இனிப்பு ஊட்டினர். எல்லா சங்கத்தினரும் வரவில்லை. பல சங்கங்கள் இன்னும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இவை எல்லாம் அரசு ஊழியர்களுக்கு தெரியும். வரும் தேர்தலில் அதற்கான ரிசல்ட் தெரியும்” என்றார்.
அமைச்சர் எ.வ.வேலு, “பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் உள்ளடக்கியதுதான் தற்போதைய திட்டம். இதை அனைத்து அரசு ஊழியர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்து, தேதி கேட்டுள்ளனர்” என்றார்.
பழனிசாமி, “பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தீர்கள். பங்களிப்பே இல்லாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கை. ஆனால், நீங்கள் பங்களிப்புடன் கூடிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளீர்கள். அதனால்தான் பெரும்பாலான அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒருசில மட்டுமே சங்கங்கள் உங்களை ஆதரிக்கின்றன. அதுதான் எதார்த்தமான உண்மை” என்றார்.