தமிழகம்

அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கே திமுகவில் அதிக சீட் - 19 பேருக்கு வாய்ப்பு!

என்.சன்னாசி

மதுரை: அதிமுகவில் இருந்து தாவியவர்களுக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் இரு பெரும் மாநில கட்சிகளாக திமுக, அதிமுக உள்ளன. அந்த வகையில், சில கருத்துவேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகியவர்களும், நீக்கப்பட்ட சிலரும் திமுகவில் இணைந்துள்ளனர். ஏற்கெனவே திமுகவில் உள்ளவர்களை பின்னுக்கு தள்ளி, அதிமுகவினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக திமுகவுக்குள் குற்றச்சாட்டு உள்ளது.

          

இதனை நிரூபிக்கும் வகையில் கடந்தமுறை திமுக அமைச்சரவையில் செந்தில்பாலாஜி, முத்துச்சாமி, ரகுபதி, எ.வ.வேலு போன்றவர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

2026 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவியவர்களுக்கே அதிக சீட்டுகள் ஒதுக்கீடு செய்திருப்பது தெரிகிறது. அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய (28) எண்ணிக்கைக்கு அடுத்த நிலையில், அதிமுகவில் இருந்து சமீபத்தில் திமுகவுக்கு சென்ற ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 19 பேருக்கு தேர்தலில் சீட் வழங்கி அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, தேனி மாவட்டம் போடி தொகுதி - ஓ. பன்னீர்செல்வம், ஒரத்தநாடு - வைத்திலிங்கம் , ஆலங்குளம் - மனோஜ் பாண்டியன், விளாத்திக்குளம் - மார்க்கண்டேயன், சென்னை துறைமுகம் - சேகர்பாபு, ஈரோடு மேற்கு - முத்துசாமி, நாகர்கோவில் - ஆஸ்டின், திருமங்கலம் - மணிமாறன் (சேடப்பட்டி முத்தையா மகன்), முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன், அருப்புக்கோட்டை -சாத்தூர் ராமச்சந்திரன் , திருவண்ணாமலை - எ வ வேலு, கோவை தெற்கு - செந்தில்பாலாஜி,

திருச்செந்துார் - அனிதா ராதாகிருஷ்ணன், திருமயம் - ரகுபதி, பெருந்துறை - தோப்பு என்.டி. வெங்கடாசலம் , விழுப்புரம் - லட்சுமணன், பாப்பிரெட்டிப்பட்டி - பழனியப்பன், ஆம்பூர் - வில்வநாதன், ஒசூர் - சத்யா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT