சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெறப்போகும் வெற்றி, பாஜகவை வீழ்த்துவதற்கான நம்பிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழங்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற விழாவில், கட்சியின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை முன்னாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன் திறந்து வைத்தார். தேசிய பொது செயலாளர் டி.ராஜா சிறப்புரையாற்றினார்.
கூட்டணி கட்சி தலைவர்கள் செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), கி.வீரமணி (திக), வைகோ (மதிமுக), திருமாவளவன் (விசிக), பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட்), ஜவாஹிருல்லா (மமக), பழ.ஆசைதம்பி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), தி.வேல்முருகன் (தவாக), அருணாச்சலம் (மநீம), முகமது அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திராவிட இயக்கத்துக்கும், பொதுவுடமை இயக்கத்துக்குமான நட்பு தேர்தல் அரசியலை கடந்தது. இந்த ஒற்றுமையை சிதைக்க பலர் முயன்றனர். ஆனால் அவர்களது எண்ணம் தான் சிதைந்தது. எங்களது தோழமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.
மதச்சார்பின்மை, சோசலிசம், பொதுவுடமை, சமூக நீதி என்கிற சொற்களை எல்லாம் ஆட்சியில் இருந்து மட்டுமல்ல, அதிகாரத்தில் இருந்தே அழிக்க வேண்டும் என பாஜக துடிக்கிறது. அதற்காகத் தான் ஜனநாயக சக்திகளை எல்லாம் ஒருங்கிணைத்து இண்டியா கூட்டணியை உருவாக்கி பாஜகவின் வேகத்தை குறைத்திருக்கிறோம்.
வரும் சட்டப்பேரவை தேர்தல் தமிழகத்துக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நடக்கிறது. தமிழகத்துக்கு துரோகங்களை செய்துவிட்டு, துரோகங்களுக்கு ஏற்ற கொத்தடிமைகளை சேர்த்துக்கொண்டு அவர்களது முதுகில் ஏறி வருகிறது பாஜக. பிரச்சாரக் கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடி அதிமுகவின் பெயரைக் கூட சொல்லவில்லை. ஏனென்றால் அதிமுக தனிக் கட்சி கிடையாது. பாஜகவின் கிளை.
இந்தியாவில் பட்டியலின மக்களுக்கு எதிரான மாநிலங்களாக பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், பிஹார், ஒடிசா, மஹாராஷ்டிரா உள்ளன. இதுதான் டப்பா இன்ஜினின் லட்சணம். தமிழகத்தில் பாஜகவின் டப்பா இன்ஜினுக்கு வேலையே கிடையாது. தமிழகத்தில் நாம் பெறப்போகும் வெற்றி, பாஜகவை வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழங்கும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பேசிய டி.ராஜா, “ஏகாதிபத்தியத்துக்குஎதிராக ஒரு வார்த்தைக் கூட பேசாத அரசாக பாஜக இருக்கிறது. கட்சியின் அடுத்த நூற்றாண்டு தொடங்கும் வேளையில் பாஜகவின் ஆட்சி நீடிக்கக் கூடாது” என்றார்.